'சாதாரண மாணவர்களையும் சிறந்தவர்களாக உருவாக்குவது தான் ஆசிரியரின் கடமை': முன்னாள் ஜனாதிபதி கலாம் - தினமலர்

''படிப்பில், சாதாரண நிலையில் உள்ள மாணவர்களை, சிறந்தவர்களாக உருவாக்குவது தான், ஆசிரியரின் முக்கியமான பணியாக இருக்க வேண்டும்'' என, முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் வலியுறுத்தினார்.

அண்ணா பல்கலையில், நேற்று, ஆசிரியர் தின விழா நடந்தது. பல்கலை துணைவேந்தர், ராஜாராம் தலைமை தாங்கினார்.

விழாவில், கலாம் பேசியதாவது: நான் பள்ளி படிப்பு படிக்கும்போது, ஐந்தாம் வகுப்பு ஆசிரியர், புறாவை படமாக வரைந்து, அதைப்பற்றி விளக்கினார். அதுதான், என்னை, 'ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங்' படிக்க துாண்டியது. அந்தளவிற்கு, எனது பள்ளி ஆசிரியர், புதிய யுக்தியுடன் பாடம் நடத்தினார்.அதேபோல், ஆசிரியர் அனைவரும், புதிய பாணியில், புதிய யுக்தியில் பாடம் நடத்த வேண்டும். வெறும் கல்வியை கற்பிப்பது மட்டும், ஆசிரியர் பணி கிடையாது; அதைத் தாண்டி, வாழ்க்கை கல்வியை, மாணவர்களுக்கு போதிக்க வேண்டும்.மாணவர்களிடையே, மனிதாபிமானத்தை, நல்ல பண்புகளை, ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும். முதலில், மாணவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.

சிறந்த மாணவர்களை, மேலும் சிறந்த மாணவர்களாக உருவாக்குவதை விட, சாதாரண, படிப்பில் பின்தங்கிய மாணவர்களை, சிறந்த மாணவர்களாக உருவாக்குவது தான், ஆசிரியரின் முக்கிய பணியாக இருக்க வேண்டும்.ஆசிரியர், தாயாகவும், தந்தையாகவும், சகோதர, சகோதரியாகவும் விளங்க வேண்டும். ஆசிரியர், மதம், ஜாதி, மொழி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர்களாக விளங்க வேண்டும். மாணவர்களின் வெற்றியை, பாராட்டவும், கொண்டாடவும், ஆசிரியர் முன்வர வேண்டும்.இவ்வாறு, கலாம் பேசினார்.

Post a Comment

0 Comments