கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும்: அப்துல் கலாம் வலியுறுத்தல் - தினமணி



அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியர் கலைசெல்வனுக்கு விருது வழங்கிய குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். உடன் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.ராஜாராம்.

கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும் என குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வலியுறுத்தினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது:

நமது நாட்டில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் 6 லட்சம் கிராமங்களில் உள்ள பள்ளிகளில்தான் பணியாற்றுகின்றனர்.

எனவே, கிராமங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அனைத்து விதமான வசதிகளையும் வழங்க வேண்டும். நகர்ப்புறங்களில் உள்ள வசதிகளைப் போல சாலை இணைப்புகள், மின்னணு சாதன இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கிராமப்புறங்களில் ஏற்படுத்த வேண்டும்.

அடிப்படை வசதிகளை வழங்குவதோடு, ஒருங்கிணைந்த கற்றல் சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும். அதோடு, கிராமங்களிலேயே இருக்க விரும்பும் அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு போதிய பொருளாதார வாய்ப்புகளையும் நாம் ஏற்படுத்த வேண்டும்.

கிராமப்புறங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட காரணங்களால் நகர்ப்புறங்களுக்குப் பணிமாறுதல் கோருவது இயல்பானதுதான். அதேபோல, அவர்கள் தங்களது அறிவையும் மேம்படுத்திக்கொள்ள நகர்ப்புறங்களில் உள்ள வசதிகளே ஏற்றதாக இருக்கும் என நம்புகின்றனர்.

கிராமப்புறங்களில் உள்ள இந்த நிலை தொடர்பாக அரசும், சமூக நிறுவனங்களும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும். கிராமப்புறங்களை இணைக்கும் வகையில் பெரும் திட்டங்களை அவர்கள் செயல்படுத்த வேண்டும்.

அணுகுண்டு சோதனைக்கு உதவிய கல்லூரி வகுப்புகள்:

எனது கல்லூரி நாள்களில் பேராசிரியர் சின்னதுரை அணு இயற்பியல் உள்ளிட்ட வகுப்புகளை எடுத்தார். பொக்ரானில் 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொளுத்திய ஒரு நாளில் அணு குண்டு சோதனை நடத்தி, அணு ஆயுத நாடாக இந்தியா மாறியது. அந்தச் சோதனைக்கு எனக்கு உதவிப் புரிந்தது பேராசிரியர் சின்னதுரையின் வகுப்புகள்தான். அந்த நாளில் அவருக்கு நான் நன்றி செலுத்தினேன்.

மாணவர்கள் பல்வேறு புதிய சிந்தனைகளுடன் இருப்பார்கள். அவர்களைக் கண்டுபிடிப்பாளர்களாக மாற்றுவதும், ஊக்கப்படுத்துவதும் ஆசிரியர்களின் கைகளில்தான் உள்ளது.

உலகில் வேறு எந்த வேலையையும் விட சமூகத்துக்குப் பயன்தரும் மிக முக்கியப் பணி ஆசிரியர் பணி ஆகும். அவர்கள் மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் பணியைச் செய்கின்றனர்.

ஆசிரியர்கள் ஏணிகளைப் போன்றவர்கள். பலர் முன்னேறுவதற்குப் பயன்படுவர்.

ஆசிரியர்களிடம் இருந்து நாம் கல்வியை மட்டுமல்ல, வாழ்க்கைக்குத் தேவையான பண்புகளையும், ஒழுக்கத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்றார் கலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்களுக்கு விருதுகளையும் கலாம் வழங்கினார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜாராம் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments