16, 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு




போடியை அடுத்த காமாட்சிபுரத்தில் கண்டறியப்பட்ட 16, 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதி கல்.

போடி அருகே காமாட்சிபுரத்தில் 16, 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்றை, போடி ஏ.வி.ச. கல்லூரிப் பேராசிரியர்கள் கண்டறிந்துள்ளனர்.

தேனி மாவட்டம், போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரி வரலாற்றுத் துறை, தொல்பொருள், பாதுகாப்பு விழிப்புணர்வு மையத்தின் மூலம் அந்த மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் நடுகல் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, கல்லூரி முதல்வர் எம்.ராஜராஜன் வழிகாட்டுதலின்படி, பேராசிரியர்கள் ஏ.ஞானசேகரன், சி.மாணிக்கராஜ், ஆர்.கபேஷ், எம்.கனகராஜ் ஆகியோர் போடியை அடுத்துள்ள காமாட்சிபுரம், ஓடைப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, காமாட்சிபுரம் அருகே தமிழகத்தில் அரிதாகக் கிடைக்கக் கூடிய "சதி' என்றழைக்கப்படும் கல் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து, கல்லூரி முதல்வர் எம்.ராஜராஜன் கூறியது:

தமிழகத்தில் காணப்படும் சதி கற்களிலேயே சற்று வேறுபாடுடையதாக இது காணப்படுகிறது. பொதுவாக, கணவர் இறந்த பிறகு, அவருடைய மனைவி மட்டுமே சிதையில் ஏறி உயிர் துறக்கும் வகையில் நட்டு வழிபடுவது சதி (உடன்கட்டை ஏறுதல்) கல். இந்தச் சதி கல்லில் தாய் தன் குழந்தையையும் கையில் ஏந்திக்கொண்டு தீயில் பாய்ந்தபடி காட்டப்பட்டுள்ளது.

இக் கல்லில் காட்டப்பட்டுள்ள சிகை அலங்காரம், அணிகலன்களின் அலங்கார நிலையைக் கொண்டு, இது கி.பி. 16, 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதி கல் எனக் கருதப்படுகிறது. மேலும், பிற்காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள், தமது இனம் சார்ந்த காவல் தெய்வம் எனக் கருதி, இச் சதி கல்லின் இரு மருங்கிலும் இரு கற்களை நட்டு, தற்போதும் வணங்கி வருகின்றனர் என்றார் அவர்.

மேலும், இந்த சதி கல் குறித்து பேராசிரியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments