ஆர்வத்தோடு கற்கலாமே.....

 மாணவர்களுக்கு படிப்பு என்பது மிகவும் கடினமாகத் தோன்றக் காரணமே இந்த தேர்வுகள்தான். தேர்வுகளும், அதனைத் தொடர்ந்து வரும் தேர்வு மதிப்பெண்களும் மாணவர்களை பெரும்பாடு படுத்துகின்றன.
உண்மையில் மாணவர்கள் நினைப்பது போல தேர்வு என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம் அல்ல. படிப்பதை எளிமையாக்கிக் கொண்டால் தேர்வுகளும் எளிமையாகிவிடும். உண்மையில் உங்களை கல்வி நிறுவனம் சோதிக்கும் முறை தேர்வு அல்ல.. நீங்களே உங்களை சோதிக்கும் முறை தான் தேர்வு என்று நினைத்துக் கொண்டு, நீங்கள் எவ்வாறு படித்துள்ளீர்கள் என்பதை தேர்வில் தெரிந்து கொள்ள விரும்புங்கள். தேர்வுகள் எளிதாகும். புத்தகங்களை எதிரிகளைப் போல பாவிக்காமல் உங்கள் நண்பர்களைப் போல பாவித்து அதில் உள்ள விஷயங்களைப் புரிந்து கொள்ளப் பாருங்கள். பொதுவாக புத்தகங்களை எதிரிகளாக நினைப்பதால் அவற்றில் உள்ள கருத்துக்களை புரிந்து கொள்ள முடியாமல் எப்போதும் புத்தகத்திற்கும், மாணவர்களுக்கும் இடையே சண்டை நடக்கிறது. அந்த பழக்கத்தை மாற்றி, புத்தகத்தை எடுக்கும்போது அதில் உள்ள ஒரு விஷயத்தையாவது புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து பாடங்களை புரிந்து கொள்ளுங்கள். மனப்பாடம் செய்யாதீர்கள். நீங்கள் புரிந்துகொண்ட விஷயங்களை நடைமுறையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இவை ஏன் இப்படி வரையறுக்கப்பட்டன என்று சிந்தியுங்கள். உங்கள் சிந்தனையை பாடங்களோடு எப்போதும் தொடர்புபடுத்திக் கொண்டே இருந்தால் பாடங்களை நீங்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஆசிரியர்கள் எப்போதும் கூறுவது, அன்றன்றைய பாடங்களை அன்றைய தினமே படித்து விடுங்கள் என்பதுதான். ஆனால் இங்கு நாம் அவ்வாறு கூறப்போவதில்லை. ஆசிரியர் நாளை நடத்தப் போகும் பாடத்தை முந்தைய நாளே படித்துப் பாருங்கள். உங்களுக்குப் புரிந்தவற்றை விட்டுவிடுங்கள். புரியாதவற்றை அடிக்கோளிடுங்கள். அதைப் பற்றி நீங்கள் புரிந்து கொண்டவை, புரிந்து கொள்ள இயலாதவை என இரண்டு பிரிவுகளை பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஆசிரியர் பாடம் நடத்தும் போது நீங்கள் புரிந்து கொண்டவைகள் சரியானவையா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். புரியாத விஷயங்களை ஆசிரியர் கூறும் போது உங்களுக்கு எங்கேப் புரியாமல் போனது என்பதை குறித்துக் கொள்ளுங்கள். அது குறித்து கேள்வி எழுப்புங்கள். சரியான விளக்கத்தைப் பெறுங்கள். அன்றைய தினம் பாடம் நடத்தும் போதே உங்களுக்கு அந்தப் பாடம் குறித்து 90% தெளிவு ஏற்பட்டுவிடும். இந்த முறையை நீங்கள் பின்பற்றினால், எந்த ஆசிரியரும் பாடம் நடத்தும் போது உங்களால் கவனிக்காமல் இருக்க முடியாது. ஒரு பாடத்தை புதிதாக நடத்தும் போது பாடங்கள் புரியாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒன்றுமே புரியாமல் போனால் எங்கே கேள்வி கேட்பது. ஆனால் ஒரு பாடத்தை முந்தைய நாள் படிப்பதால் பல கேள்விகளோடும், சில புரியாத விடைகளோடும் பள்ளிக்கு வந்தால் உங்களால் ஆசிரியர் பாடம் நடத்தும் போது எவ்வாறு கேள்வி கேட்காமல் இருக்க முடியும். சிந்தித்துப் பாருங்கள். இந்த புதிய முறை நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். உங்கள் நண்பர்களுக்கும் நிச்சயம் இந்த முறையைக் கூறி பின்பற்றச் சொல்லுங்கள். வகுப்பறையில் உங்கள் நண்பர்கள் குழுவிற்கு படிப்பாளிகள் குழு என்று பட்டம் சூட்டப்படுவீர்கள். ஒவ்வொருவரும், அவர்களுக்கே உரிய முறையில் படிக்கலாம். சிலர் நடந்து கொண்டே படிப்பார்கள். சிலர் அதிகாலையில் மட்டும் படிப்பார்கள். சிலருக்கு இரவுக்குப் பிறகுதான் படிக்கவேத் தோன்றும். குழுவாக படிப்பது, தனித்துப் படிப்பது, சத்தம் போட்டு படிப்பது, மனதுக்குள் சொல்லிக் கொள்வது, மற்றவரிடம் ஒப்பிப்பது போன்று படிப்பதில் பல வகைகள் உள்ளன. இதில் எது நமக்கு சரியாக வருமோ அந்த முறையைப் பின்பற்றி படிப்பது நல்லது. 10 முறை படித்தும் ஒரு தகவல் நமது மனதில் பதியவில்லை என்றால், ஒரு முறை எழுதிப் பாருங்கள். நீங்கள் எழுதிப் பார்த்ததை வைத்து படிக்கும் போது அது உங்கள் நினைவில் எளிதாக இடம் பிடித்துக் கொள்ளும். தொடர்ந்து பல மணி நேரங்கள் உட்கார்ந்து படித்துக் கொண்டே இராமல் அவ்வப்போது பாடல் கேட்பது, பிடித்த உணவை சாப்பிடுவது, கொஞ்ச நேரம் விளையாடுவது என வேறு திசைகளில் உங்கள் கவனத்தை செலுத்திவிட்டு மீண்டும் படிக்கத் துவங்குவதால் மனதும், மூளையும் புத்துணர்ச்சியை பெறுகிறது. நீங்கள், நாம் எப்போதும் சராசரி மாணவர்தான். நம்மால் சிறந்த மதிப்பெண்களை எடுக்க முடியாது என்று நினைப்பவராக இருந்தால்.. கண்டிப்பாக அந்த எண்ணத்தை மாற்றுங்கள். தற்போது பல துறைகளில் சாதனை படைத்தவர்கள் பலரும், ஒரு காலக்கட்டம் வரை சராசரி மாணவராக இருந்தவர்களாகத்தான் இருப்பார்கள். எப்போதும் படித்து அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை விட, பொதுத் தேர்வின் போது திடீரென ஒரு உந்துதலோடு படிக்கத் துவங்கும் மாணவர்கள் பலரும் அதிக மதிப்பெண் எடுப்பதை நாம் கண்கூடாக பார்த்திருப்போம். எனவே, முயன்றால் முடியும் என்ற எண்ணத்தை மட்டுமே மாணாக்கர் கொண்டிருக்க வேண்டுமேத் தவிர, நம்மால் முடியாது என்ற எந்தவிதமான எதிர்மறை எண்ணங்களையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ளக் கூடாது. நாம் ஒரு சராசரி மாணவர்... ஆசிரியர் நடத்தும் பாடங்கள் புரியவேயில்லை. டியூஷன் சென்றாலும் அங்கும் அதே நிலைமைதான் என்ன செய்வது என்று யோசித்தால் அதற்கும் ஒரு நல்ல வழி உள்ளது. உங்கள் வகுப்பில் சிறப்பாக படிக்கும் மாணவன் அல்லது மாணவியுடன் தோழமை பாராட்டுங்கள். அந்த நட்பை அடிப்படையாக வைத்து அவரது படிக்கும் பழக்க வழக்கத்தை நீங்களும் பின்பற்றலாம். உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாமல், நேரடியாக படிக்கும் மாணவ, மாணவியரிடம் தோழமையாகப் பழகி அவர்களுடன் சேர்ந்து படித்து அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், ஓரளவிற்காவது உங்களது நிலைமையை நிச்சயமாக உயர்த்திக் கொள்ள முடியும். கடினமான மனப்பாடப் பகுதிகளை பெரிய சார்ட்டில் எழுதி உங்கள் வீட்டில் கண்ணில் படும் இடத்தில் ஒட்டி வையுங்கள். அவ்வப்போது அதை ஒரு முறை படித்துப் பாருங்கள் போதும், ஓராண்டிற்குள் நிச்சயம் அது உங்கள் நினைவுத் திறன் பெட்டியில் ஆழத்தில் போய் உட்கார்ந்து கொள்ளும். குழுவாகப் படிக்கும் போது, நீங்கள் ஒரு முறை வாய்விட்டு ஒரு பாடத்தை படிப்பதோடு மட்டுமல்லாமல், மற்றொருவர் அந்த பாடத்தை படிப்பதை உங்கள் காதுகளும் கேட்கின்றன. எனவே, ஒரே நேரத்தில் இரண்டு வகைகளில் ஒரு பாடம் உங்கள் நினைவுத்திறனை எட்டுகிறது. ஒரு பாடத்தை ஒரு முறை படிக்கும் போது புரியவில்லை விளங்கவில்லை என்பதற்காக விட்டு விடாமல், தொடர்ந்து மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். ஒரு முறை ஒரு வார்த்தை புரிந்து விட்டால் கூட போதும், அதன் தொடர்ச்சியாக மற்ற விஷயங்களை உங்களால் அடுத்தடுத்து படிக்கும் போது புரிந்து கொள்ள இயலும். சொல்லகராதி பயன்படுத்துவதை அதிகரியுங்கள். எந்த ஒரு வார்த்தை புரியாமல் போனாலும், அதை அப்படியே விட்டுவிடாமல் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை டிக் ஷ்னரி எனப்படும் சொல்லகராதி மூலமாக பார்த்து தெளிவு பெருங்கள். கணிதக் கணக்குகளைப் போடும் போது கால்குலேட்டர்களைப் பயன்படுத்தாமல் சுயமாக போட்டு பயிற்சி எடுக்கலாம். உங்கள் கணித ஆற்றல் மேம்படும். மாணவர்களே இந்த காலம் பொன்னான காலமாகும். இப்போது இதனை விரயமாக்கிவிட்டு எப்போது தேடினாலும் கிடைக்காது. எனவே கிடைத்த நேரத்தை பொன்னான நேரமாக்கி சாதனையாளராகுங்கள். 

Post a Comment

0 Comments