சிவதாணு பிள்ளைக்கு சாஸ்திரி விருது

பிரபல விஞ்ஞானியும், 'பிரமோஸ்' ஏவுகணை திட்டத்தின் தந்தையுமான,
சிவதாணு பிள்ளைக்கு, லால்பகதூர் சாஸ்திரி விருதை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று வழங்கினார்.
நாட்டின் பாதுகாப்பு துறைக்கு தேவையான, முக்கிய ஏவுகணைகளை தயாரித்து சோதனை செய்யும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக பணியாற்றியவர் சிவதாணு பிள்ளை, 67. நாட்டின் முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவரான இவர், பிரமோஸ் ஏவுகணை திட்டத்தில் ஆற்றிய பணிக்காக, 'பிரமோஸ் ஏவுகணை திட்டத்தின் தந்தை' என, அழைக்கப்படுகிறார். 'அக்னி', 'பிருத்வி', 'நாக்', 'ஆகாஷ்' போன்ற முக்கிய ஏவுகணை திட்டத்தில் பணியாற்றிய இவருக்கு, விக்ரம் சாராபாய், அப்துல் கலாம், சதீஸ் தவான் உள்ளிட்ட மூத்த விஞ்ஞானிகளுடன் பணியாற்றி அனுபவமும் உண்டு.

அறிவியல் துறையில் பிள்ளை யின் சாதனையை பாராட்டி, பத்மஸ்ரீ, பத்ம பூஷண் போன்ற விருதுகளை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது. இந்நிலையில், விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும், நாட்டின் உயரிய தேசிய விருதான லால்பகதூர் சாஸ்திரி விருதை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிள்ளைக்கு நேற்று வழங்கினார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிள்ளையை பாராட்டிய பிரணாப், நாட்டின் மற்ற விஞ்ஞானிகளையும் வெகுவாகப் பாராட்டினார்.

Post a Comment

0 Comments