மாணவ, மாணவியரின் பாதுகாப்பிற்காக 113 விதிமுறைகள் தயார்!

பள்ளி, கல்லூரிகளில், மாணவ, மாணவியரின் ஆரோக்கியம், அடிப்படை வசதிகள், தனிப்பட்ட பாதுகாப்பு, போக்கு வரத்து வசதி உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் தொடர்பாக, 113 விதிமுறைகளை வகுத்துள்ள
கல்வித்துறை, அதற்கான வரைவு பிரதியை வெளியிட்டுள்ளது.


கருத்துக்கள்: இந்த விதிமுறைகள் குறித்து, வரும், 25ம் தேதிக்குள் ஆலோசனைகள், கருத்துக்களை தெரிவிக்கும்படி பெற்றோர், கல்வி வல்லுனர்கள், கல்வி நிறுவனங்களிடம் கேட்டுள்ளது.

சமீபத்தில், பள்ளி, கல்லூரி மாணவியர் மீதான பாலியல் வன்முறை சம்பவங்களுக்குப் பின், மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்காக, கர்நாடக அரசு வழி காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதை தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அலுவலகமும் விதிமுறைகளை வெளியிட்டது. இத்தனைக்கு பின்னரும், பெங்களூருவில், சிறுமியர் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் குறையவில்லை.

இதை தீவிரமாக எடுத்துக்கொண்ட அரசு, முதன் முறையாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்காக, சட்ட விதிமுறைகளை அமல்படுத்த முன்வந்துள்ளது. இதன் மூலம், கல்வி நிறுவனங்களுக்கு சட்டத்தினாலேயே, கடிவாளம் போட அரசு முன் வந்துள்ளது. சட்ட விதிமுறை, 3 பகுதிகளை கொண்டுள்ளது. 71 பக்கம் கொண்ட, சட்ட வரைவு கல்வித்துறையின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் பகுதியில், பள்ளி, ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், பெற்றோர், மாணவர்களின் பொறுப்பு பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அடிப்படை வசதிகள்: அடுத்த பகுதியில், பாதுகாப்பு நடவடிக்கைகள், அதை செயல்படுத்துவது தொடர்பாக விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி பகுதியில், பள்ளிகளில் கட்டாயமாக தேவைப்படும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மற்ற அம்சங்கள் குறித்து விரிவாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கல்வித்துறை குறிப்பிட்டுள்ள, 113 அம்சங்களில், 94 அம்சங்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டுமென்றும், சட்ட வரைவில் உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தை தொழிலாளர்கள் தடை சட்டம், குழந்தைகள் நியாய சட்டம், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், கல்வி உரிமை சட்டம், போஸ்கோ சட்டம், .நா., சபையின் வழிகாட்டுதலின்படியும், இந்த சட்ட வரைவு அமைக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை மற்றும் சட்டதுறையின் வல்லுனர்கள் ஒருங்கிணைந்து, இந்த சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments