உங்கள் உணவில் விஷம்! பூச்சிக்கொல்லி பயங்கரம்!

ந்தப் பூமியை ஒரு நஞ்சுப்படலம்போல சூழ்ந்திருக்கின்றன பூச்சிக்கொல்லி மருந்துகள். பெயர்தான் ‘பூச்சிக்கொல்லி…’, அவை உண்மையில் அழிப்பது சுற்றுச்சூழலைத்தான். இதில் சமீபத்திய வரவு ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள். பூச்சிகளுக்கும் மனிதனுக்கும் நடக்கும் யுத்தத்தில், பூச்சிகளின் தொடர் வெற்றியைச் சகித்துக்கொள்ள முடியாத மனிதன் கண்டுபிடித்த கொடிய நஞ்சு இது.

தற்போது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளில் வீரியம் குறைந்தது எண்டோசல்பான். இந்தப் பூச்சிக்கொல்லி ஏற்படுத்திய பேரழிவுக்கு உதாரணம், கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதி. ஒரு காலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருந்த காசர்கோட்டில் மாநில அரசுக்கு சொந்தமான முந்திரித் தோப்புகளில், 1978-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஹெலிகாப்டர் மூலமாக எண்டோசல்பான் தெளிக்கப்பட்டது. அதன் பலன், இன்றைக்கும் அந்தப் பகுதியில் மனிதர்களும் கால்நடைகளும் நரம்பு மண்டலப் பாதிப்பு, மனநலப் பாதிப்புகளுடன் நடைபிணங்களாகத் திரிகிறார்கள். வீரியம் குறைந்த எண்டோசல்பானுக்கே இப்படி என்றால், தற்போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் அதைவிட பல மடங்கு வீரியமானவை. பசுமைப் புரட்சியின் விளைவாக கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, நாடு முழுவதும் அபரிமிதமாக அதிகரித்துவிட்ட ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, பல்வேறு நோய்களாக விகார விஸ்வரூபம் எடுக்கின்றன!
கோவில்பட்டியில் உள்ள மண்வளப் பரிசோதனை நிலையத்தின் வேளாண் அலுவலரும் பூச்சியியல் வல்லுநருமான நீ.செல்வம் இது தொடர்பாக விவரிப்பவை அனைத்தும் அதிரவைக்கும் உண்மைகள்…
”மனித இனம் இன்றைக்கு சந்திக்கும் பெரும்பாலான நோய்களுக்கு பூச்சிக்கொல்லிகளும் ஒரு காரணம். பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி நஞ்சுகள் காற்று, மண், நீரில் எஞ்சிவிடுகின்றன. இந்த எஞ்சிய நஞ்சு, பயிர்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வழியாக நம் உடலுக்குள் சென்று தங்கி மெள்ள மெள்ளக் கொல்லும் விஷமாக மாறுகின்றன. 100 மில்லி பூச்சிக்கொல்லியைக் குடித்தால், உடனே மரணம். அதே பூச்சிக்கொல்லி பல்வேறு காரணிகள் வழியாக, மனித உடலில் கொஞ்சம் கொஞ்சமாகப் படிந்து 10, 15 ஆண்டுகளில் 100 மில்லி அளவை எட்டும்போது, உடனடி மரணம் நிகழாவிட்டாலும் உள்உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும். சிறுநீரகம், மூளை, எலும்புகள், ரத்தம் எனப் பல இடங்களிலும் இந்த நஞ்சு பரவும்போது, ரத்த அழுத்தம், பார்வைக் குறைபாடு, ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு என நோய்கள் உருவாகத் தொடங்குகின்றன. இதையெல்லாம்விட தற்போது சந்தையில் கிடைக்கும் ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகளால், மனித இனம் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்கப்போகிறது!” என்கிறார்.
தனி மனிதர்கள் என்ன செய்ய முடியும்?
ல்லா காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களிலும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டுள்ள நிலையில் சாதாரண மக்கள் என்னதான் செய்வது? இவற்றில் இருந்து எந்த அளவுக்கு தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியும்? – சித்த மருத்துவர் கு.சிவராமன் சொல்லும் ஆலோசனை என்ன?
”பளபளப்பான காய்கறிகளைத் தேடி வாங்குவதுதான் இன்றைய நுகர்வோரின் மனநிலை. காய்கறி பளபளப்பாக இருக்கிறது என்றால், அதில் ரசாயன மருந்து இருக்கிறது என்று அர்த்தம். உண்மையில் வாடிய சொத்தை காய்கறிகளிலும் கீரைகளிலும் பூச்சிக்கொல்லிகளின் எச்சம் இருக்காது. அவற்றை வாங்கி, சொத்தைப் பகுதியை நீக்கிவிட்டு மீதியைப் பயன்படுத்தலாம். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை வழி விவசாய முறைக்கு மாறிவருகிறார்கள். பெருநகரங்களில்கூட இன்று ஆர்கானிக் பொருட்கள் கிடைக்கின்றன. நாம்தான் அவற்றைத் தேடிப்பிடித்து வாங்க வேண்டும். ‘ஆர்கானிக் காய்கறிகள் எங்கு கிடைக்கின்றன என்பது தெரியாதே?’ எனப் பலர் சொல்லக்கூடும். பிடித்த திரைப்படம் எந்தத் தியேட்டரில் ஓடுகிறது, என்ன டிசைன் துணி எந்தக் கடையில் கிடைக்கும் என்பதை ஆர்வமாகத் தேடித் தெரிந்துகொள்வதைப்போல, இதையும் ஆர்வத்துடன் அணுகினால் எளிதில் கிடைத்துவிடும்.
இதுபோன்ற ஆர்கானிக் பொருட்களின் விலை அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான். அதற்குக் காரணம் உற்பத்திக் குறைவே. அதிகம் பேர் இயற்கைப் பொருட்களுக்கு மாறும்போது தேவை அதிகரிக்கும்; விவசாயமும் அதிகரிக்கும்; விலையும் குறையும். ஆகவே, விலை குறைய வேண்டும் என்றாலே அதிகம் பேர் ஆர்கானிக் பொருட்களை வாங்கும்போதுதான் அது நடக்கும். நச்சு நிறைந்ததாக மாறியிருக்கும் நமது இன்றைய சூழலை, ஆரோக்கியமான உணவின் மூலம்தான் மாற்ற முடியும். அந்த நல்ல உணவைப் பெறுவதற்கான தடைகளை நம் முயற்சியில் நாம்தான் கடந்தாக வேண்டும்!”

Post a Comment

1 Comments

  1. Good news sir. Here after we should take care of our land wealth . at least we will try to improve the wealth .

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..