கழுகார்
உள்ளே நுழைந்ததும் தனது சிறகுகளுக்குள் இருந்து
சில காகிதங்களை எடுத்து விரித்தபடி செய்திகளைக்
கொட்ட ஆரம்பித்தார்!
”முதல்வர்
பன்னீர்செல்வம் கிரானைட் முறைகேடு சம்பந்தமாக விடுத்த அறிக்கை சிக்கலில்
வந்து நிற்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் இந்நாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் அதனால் அறிக்கைப் போர்
நடந்துகொண்டு இருக்கிறது. அதில் பல்வேறு ரகசியங்கள்
புதைந்துள்ளன!”
”அதைச்
சொல்வதற்குத்தானே நீர் இருக்கிறீர்?”
”தமிழகம்
முழுவதும் நடக்கும் மணல் கொள்ளைகள் பற்றி
விசாரிக்க வேண்டும் என்று டிராஃபிக் ராமசாமி
தாக்கல் செய்த வழக்கில், சென்னை
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய
பெஞ்ச் அதிரடி உத்தரவைப் போட்டது.
சகாயம் ஐ.ஏ.எஸ்
தலைமையில் ஒரு மாத காலத்துக்குள்
இதனை விசாரித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய
வேண்டும் என்று கடந்த செப்டம்பர்
10-ம் தேதி தீர்ப்பு வந்தது.
அதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச
நீதிமன்றம் போனது. உச்ச நீதிமன்றம்
அந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
மறுபடியும் இங்கேயே சீராய்வு மனுவை
தாக்கல் செய்தார்கள். அதனையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அபராதமாக 10 ஆயிரம் ரூபாயையும் நீதிபதிகள்
விதித்தார்கள். ‘கனிம வள முறைகேடு
குறித்து விசாரிப்பதற்காக ஐ.ஏ.எஸ்
அதிகாரி சகாயம் கேட்கும் அனைத்து
வசதிகளையும் தமிழக அரசு நான்கு
நாட்களுக்குள் அவருக்குத் தர வேண்டும். அதில்
ஏதாவது குறைபாடு இருந்தால் நீதிமன்றத்தை சகாயம் அணுகலாம்’ என்று
தலைமை நீதிபதி கௌல், சத்தியநாராயணா
அடங்கிய பெஞ்ச் அறிவித்தது. இந்த
உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள், கடந்த அக்டோபர்
28. இந்த உத்தரவை தமிழக அரசு
கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நான்கு நாட்களுக்குள் என்றால்
28,29,30,31-க்குள்!”
”உத்தரவு
சகாயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாகத் தகவல் வந்ததே?”
”அதில்தான்
சூட்சுமம் இருக்கிறது. சொல்கிறேன்! 31-ம் தேதி மாலை
4 மணிக்கு தலைமைச் செயலாளர் அலுவலகத்தில்
இருந்து சகாயம் இப்போது பொறுப்பில்
இருக்கும் அறிவியல் நகரத்துக்கு போன் வந்துள்ளது. ‘முக்கியமான
கடிதம் அவருக்கு வரப் போகிறது, அலுவலகத்தில்
காத்திருக்கச் சொல்லுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.
5.30-க்கு அலுவலக வேலை நேரம்
முடிந்து சகாயம் கிளம்பிவிட்டால், நீதிமன்றம்
கொடுத்த கால அவகாசமான நான்காவது
நாளும் முடிந்ததாக அர்த்தம் ஆகிவிடும் அல்லவா? அவசர அவசரமாக
இரண்டு பக்க உத்தரவை தலைமைச்
செயலாளர் மோகன்வர்கீஸ் சுங்கத் அனுப்பி வைத்துள்ளார்.
அதில் 3, 4 எண் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள்தான்
முக்கியமானவை. ‘உங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து
தர மதுரை மாவட்ட கலெக்டருக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. வேண்டிய தகவல்களை ஜியாலஜி
அண்டு மைன்ஸ் துறையில் பெற்றுக்கொள்ளலாம்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஜி.பி
தருவார்’ என்று மொட்டையாக உள்ளது
அந்த உத்தரவு.
‘இது தமிழ்நாடு சம்பந்தப்பட்ட விவகாரம். ஆனால் மதுரை கலெக்டருக்கு
மட்டும் உத்தரவு போட்டுள்ளார்களே’ என்று
யோசித்த சகாயம், ஜியாலஜி அண்டு
மைன்ஸ் கமிஷனர் அதுல் ஆனந்துக்கு
ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில்
தனக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்
என்று குறிப்பிட்ட சகாயம், 14 அதிகாரிகளை தனக்குத் துணையாக வைத்துக்கொள்ள அனுமதி
கேட்டுள்ளார். குறிப்பிட்ட ரேங்க் உள்ள அதிகாரிகளை
அரசு பணியில் இருந்து அழைத்துக்கொள்ள
அனுமதி கேட்டார். ஆனால், இதற்கு அதுல்
ஆனந்த் அனுப்பியுள்ள பதிலில், தானே சில பெயர்களை
குறிப்பிட்டு இவர்களை வைத்துக்கொள்ளுங்கள் என்று
சொல்லி இருக்கிறாராம். ‘தான் விசாரணை செய்ய
வரும் தகவல்களை தமிழகம் முழுவதும் உள்ள
மாவட்ட கலெக்டர்களுக்கு சொல்லுங்கள்’ என்று சகாயம் கேட்க,
தலைமைச் செயலாளரும் அதுல் ஆனந்தும் அனுப்பும்
கடிதங்கள் அனைத்தும் மதுரையில் விசாரித்தால் மட்டும் போதும் என்று
சொல்கிறதாம்!”
”அதாவது..?”
”விளக்கமாகச்
சொல்கிறேன். ‘இந்த வழக்கே தமிழகம்
முழுக்க இதுவரை நடந்த, நடக்கும்
கனிமக் கொள்ளைகளைப் பற்றியது. அந்த முறைகேடுகளை விசாரித்து
அறிக்கை தாக்கல் செய்யவே சகாயத்தை
சென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது.
சகாயம் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் தேவையில்லை என்று
சொல்லி தமிழக அரசு தாக்கல்
செய்த மனுவில், தமிழ்நாடு முழுவதும் கனிமத் துறையில் நடந்த
முறைகேடுகளைத் தடுக்க எடுத்த முயற்சிகளைப்
பட்டியலிட்டுச் சொன்னார்கள். அப்படி இருக்க… இப்போது
மதுரையை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வது
கிரானைட் விவகாரம் தவிர மற்ற எதையும்
சகாயம் விசாரிக்காமல் முடக்கும் திட்டம்’ என்று சொல்கிறார்கள் விவரம்
அறிந்தவர்கள். கிரானைட் பிரச்னை 10 மாவட்டங்களில் இருக்கிறது. கார்னெட் விவகாரம் 4 மாவட்டங்களில் இருக்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மணல்
கொள்ளை நடக்கிறது. அதனால்தான் ‘தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும்’
என்று நீதிபதிகள் சொன்னார்கள். ஆனால், தமிழக அரசு
இதனை வசதியாக மறைத்து மதுரைக்கு
மட்டும் விசாரணை என்று சுருக்கிவிட்டது.
தமிழ்நாடு முழுவதும் சகாயம் விசாரிக்கப் போகிறார்
என்று நினைத்த பொதுமக்கள் எல்லா
ஊர்களிலும் இருந்து சகாயத்துக்கு மனுக்களை
அனுப்பி வருகிறார்கள். தூத்துக்குடி, கன்னியாகுமரியில் இருந்து சகாயம் அலுவலகத்துக்கு
வந்து மனுக்கள் கொடுத்துச் செல்கிறார்களாம். எனவே, மீண்டும் சென்னை
உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு இதனைக் கொண்டு செல்ல
சிலர் முயற்சித்து வருகிறார்கள்!” என்ற கழுகார் சிறிது
இடைவெளிவிட்டு தொடங்கினார்.
”ஒரு மாநில அரசாங்கத்தில், உச்சக்கட்டத் தலைமைப் பதவிகள்
எது என்று பட்டியலிட்டால் முதலமைச்சர்,
தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி என்றுதான் வரிசைப்படுத்த
முடியும். இவர்கள் மூன்று பேர்தான்
அரசாங்கம். இவர்கள் நினைப்பதையும் சொல்வதையும்
நிறைவேற்றித் தருவதுதான் மற்ற துறை அதிகாரிகளின்
வேலை. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரையில்,
இந்த மூன்று பதவிகளின் நாற்காலிகளில்
அமரவைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்பும் அதிகாரமும்
இல்லை. இவர்களை ஆட்டுவிப்பது இவர்களுக்குப்
பின்னால் இருப்பவர்கள். தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகாரம் இல்லை. அதுபோல, தலைமைச்
செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத்துக்குப்
பின்னால், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி
ஷீலா பாலகிருஷ்ணன் ஆலோசகர் என்ற பெயரில்
நியமிக்கப்பட்டு, அவரே அனைத்தையும் பார்த்துக்கொள்கிறார்.
தமிழக போலீஸ் டி.ஜி.பி அசோக்குமாருக்குப் பின்னால்
ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்
அதிகாரி ராமானுஜம் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் உச்சக்கட்ட அதிகாரமிக்க பதவிகள் டம்மியாக்கப்பட்டுள்ளன.”
”ம்!”
”ஜெயலலிதா
அவர்களது கட்சியின் தலைவி, அவரது கட்டளையை
பன்னீரால் மீற முடியாது. ஆனால்,
தலைமைச் செயலாளரின் ஆலோசகராக இருக்கும் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும்
தமிழக போலீஸ் டி.ஜி.பி-யின் ஆலோசகராக
இருக்கும் ராமானுஜத்தின் கதை வேறு. இவர்கள்
நியாயப்படி ஓய்வுபெற்றுவிட்ட அதிகாரிகள். இப்போது இவர்களுக்காக அரசாங்கத்தின்
சார்பில் சம்பளமும் கொடுத்து அரசாங்கத்தின் சலுகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இவர்கள் ஆலோசகர்கள்
என்ற பதவியில் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இவர்களுக்குத் தெரியாமல் எதையும் செய்ய முடியாமல்
தலைமைச் செயலாளரும் போலீஸ் டி.ஜி.பி-யும் தங்களின்
கை கட்டப்பட்டுள்ளதாக நினைக்கின்றனர். ‘அரசாங்கத்தின் ரகசிய கோப்புகளை அரசுப்
பொறுப்பில் இருப்பவர்கள் மட்டும்தான் பார்க்கவும் அதில் முடிவெடுக்கவும் முடியும்.
ஆனால், தற்போது அரசாங்கத்தின் ரகசியக்
கோப்புகள், விஷயத்தில் என்ன செய்வதென்ற குழப்பம்
வேறு. அந்தக் கோப்புகளில் தன்னிச்சையாக
முடிவெடுப்பதா? ஓய்வுபெற்ற இந்த அதிகாரிகளிடம் அவற்றைக்
காட்டி அதன் பிறகு முடிவெடுப்பதா?
என்பதில் சிக்கல் நீடிக்கிறது’ என்று
சொல்கிறார்கள். ஒட்டுமொத்தமாக ஐ.ஏ.எஸ்,
ஐ.பி.எஸ்
அதிகாரிகள் பலரிடமும் இருக்கும் மனக்குமுறல், ஓய்வுபெற்ற இவர்களை ஆலோசகர்கள் என்ற
பெயரில் நியமித்தால், தற்போது பொறுப்பில் இருப்பவர்களுக்கு
திறமை இல்லை என்று சொல்வதாகத்தானே
அர்த்தம். இப்படியே ஒவ்வொரு துறைக்கும் இதேபோல்
நியமிக்க ஆரம்பித்தால், நிழல் அரசாங்கம்தான் நடக்கும்.
திறமையற்றவர்களை ஏன் பொறுப்புக்கு கொண்டுவர
வேண்டும். அதன் பிறகு அவர்களுக்கு
ஆலோசகர்கள் என்ற பெயரில் ஒருவரை
ஏன் நியமிக்க வேண்டும் என்று குமுறுகின்றனர். அத்துடன்,
தற்போது ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஷீலா பாலகிருஷ்ணன் தன்னுடைய
பதவிக்காலத்தில் அப்படி என்ன சிறப்பாக
செயல்பட்டுவிட்டார்? டி.ஜி.பி-க்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள
ராமானுஜத்துக்கு, சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்படி வரும் என்பதிலேயே
கோட்டைவிட்டவர். இவர்களை ஆலோசகராக நியமிப்பது
நிர்வாகத்தில் தேவையற்ற குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும்’ என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர்!”
”இதையெல்லாம்
தெரியாமலா ஆலோசகர்களாக போட்டிருப்பார்கள்?”
”ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம் ஆகிய இருவருக்கும் ஏதாவது
செய்தாக வேண்டும் என்று நினைத்து இதனை
செய்துள்ளார்கள். மற்றபடி இப்போது பதவியில்
இருப்பவர்களைக் குறைத்து மதிப்பிடவில்லை என்று சில அதிகாரிகள்
சமாதானம் சொல்லி வருகிறார்களாம்!”
என்ற கழுகாரை அரசியல் பக்கமாகத்
திருப்பினோம்! ”நடிகர் கார்த்திக்
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாரா இல்லையா?”
”அது அவருக்கே தெரியாதே! தான் குழப்பவாதி என்பதை
மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்
கார்த்திக். சத்தியமூர்த்தி பவனில், சிதம்பரத்தை சேர்ந்த
மணிரத்தினம் பா.ம.க-வில் இருந்து விலகி
காங்கிரஸில் சேரும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்த இளங்கோவனுக்கு தொலைபேசியில்
அழைப்பு ஒன்று வந்தது. பேசி
முடித்ததும், ‘நடிகர் கார்த்திக் தனது
கட்சியை காங்கிரஸோடு இணைக்க உள்ளாராம்’ என்று
பத்திரிகையாளர்களிடம் உற்சாகமாகக் கூறினார். சொன்னதுபோலவே கார்த்திக்கும் அங்கு வந்தார். ‘சத்தியமூர்த்தி
பவன் எனக்குக் கோயில் போன்றது. இந்தக்
கோயிலுக்கு இரண்டாவது முறையாக வந்துள்ளேன். இனி
நான் காங்கிரஸோடுதான் இருப்பேன். எங்களுக்குள் நடந்த திருமணம் விவாகரத்து
ஆகாது’ என்றவர், திடீரென்று என்ன நினைத்தரோ ‘நான்
கட்சியை எல்லாம் இணைக்க வரவில்லை.
என்னுடைய ஆதரவு எப்போதும் காங்கிரஸுக்கு
உண்டு என்பதைக் கூறத்தான் இங்கு வந்தேன்’ என்று
சொல்ல… இளங்கோவன் முதல் அனைவரும் விழிபிதுங்கி
நின்றார்கள். இறுதிவரை கார்த்திக் எதற்காக சத்தியமூர்த்தி பவன்
வந்தார் என்பது புரியாத புதிராகவே
இருந்தது. வெளியில் வந்த கார்த்திக்கை பார்த்து
நிருபர்கள் ஓடிவந்து, ‘சார் நீங்க கட்சியில
இணைந்துட்டீங்களா, இல்லையா?’ என்று கேட்டார். ‘நான்
இணையலீங்க. அது பெரிய விஷயம்,
அதை சாதாரணமா சொல்ல முடியாது’ என்று
சொல்லிவிட்டு, ‘என் காரை எடுத்துட்டு
வரச் சொல்லுங்க’ என்று கத்தினார். அவரது
காரைப் பார்த்து, ‘அதோ இருக்கு அதுதான்
என்னோட கார்… அதை எடுத்துட்டு
வரச் சொல்லுங்க’ என்றார். யாரோ ஒரு ஆள்
ஓடினார். கார் இருந்தது. டிரைவர்
இல்லை. அந்தத் தகவலை கார்த்திக்கிடம்
வந்து சொன்னார் அவர். கார்த்திக் அப்படியே
நின்றுகொண்டு இருந்தார். திடீரென ஏதோ ஞாபகம்
வந்தவராக, ‘நான்தான் காரை ஓட்டிட்டு வந்தேன்…
ஸாரி மறந்துட்டேன்’ என்றபடி தனது காரை
நோக்கி கார்த்திக் போனார்.”
”கார்த்திக்
காங்கிரஸ் ஆபீஸுக்குத்தான் வரணும்னு வந்தாரா… அல்லது பி.ஜே.பி ஆபீஸுக்கு போகலாம்னுட்டு
சத்தியமூர்த்தி பவன் வந்துட்டாரா?”
”அதுவும்
அவருக்குத்தான் தெரியும். ஜனவரி மாதத்தில் மதுரையில்
நடக்கவுள்ள கூட்டத்தில் நடிகர் கார்த்திக் தன்னுடைய
நாடாளும் மக்கள் கட்சியை காங்கிரஸோடு
இணைக்கத் திட்டமிட்டுள்ளாராம்.”
”போலீஸ்,
சொத்துப் பிரச்னை, கடன் என்று ஏதாவது
ஒரு சிக்கல் எழும்போதெல்லாம் அரசியல்
கிச்சுகிச்சு மூட்டுவது அவருக்கு வழக்கம்!” என்று சொல்லிவிட்டு எழுந்த
கழுகார், ”கத்தி படத்தின் தயாரிப்பாளர்
சுபாஷ்கரன் அல்லிராஜா இலங்கை விமான நிலையத்தில்
கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அது
உண்மை அல்லவாம்! கொழும்பு விமான நிலையத்தில் லண்டன்
செல்லத் தயாராக இருந்தபோது, லைக்கா
நிறுவன அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா
மற்றும் துணைத் தலைவர் பிரமானந்தன்
சிவசாமி இருவரும் 10 புலனாய்வுத் துறை அதிகாரிகளால் விசாரணைக்காக
அழைக்கப்பட்டதாகவும் அதற்கு அவர்கள் மறுத்து
அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இணைய ஊடகங்களில் செய்திகள்
கசிந்தன. மேலும், அந்த விமானத்தில்
லைக்கா தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த 30 பேர் இருந்ததாகவும் அதில்
சொல்லப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில் அதுபோன்ற
எந்த விசாரணையும் நடைபெறவில்லையாம். வாக்குவாதம்தான் நடைப்பெற்றது. ‘சுபாஷ்கரன் லண்டன் செல்லவிருந்தது உண்மைதான்.
ஆனால், காலதாமதமாக வந்ததால் ‘போர்டிங் டைம்’ முடிந்து விமானத்தின்
கதவுகள் அடைக்கப்பட்டன. விமானத்தின் உள்ளே சுபாஷ்கரனின் உறவினர்களும்
இருந்துள்ளனர். அவர்கள், ‘சுபாஷ்கரன் வராமல் நாங்களும் போக
மாட்டோம்’ என்று சொல்லியுள்ளார்களாம். விமானத்துக்கு வெளியே
சுபாஷ்கரன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதைத்தான் சிலர் இப்படி கிளப்பிவிட்டுள்ளனர்.
லண்டனுக்கு அடுத்து செல்லவிருந்த எமிரேட்ஸ்
விமானத்தில் ஊருக்குத் திரும்பினார் சுபாஷ்கரன்’ என்கிறார்கள்” என்றபடி பறந்தார் கழுகார்!
0 Comments
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..