திரைக்கு சென்ற 17 மாணவர்கள் சஸ்பெண்ட்

தமிழ்நாடு முழுவதும் பிரபல நடிகர் நடித்த புதிய சினிமா வெளியிடப்பட்டது. திருப்பூரில் இந்த சினிமாவை பார்க்க அரசு பள்ளி மாணவர்கள் பலர் காலை வகுப்புகளுக்கு வராமல் புறக்கணித்து விட்டு, தாராபுரம் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர்.

அவர்கள் தியேட்டரில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பள்ளி சீருடை அணிந்து இருந்தனர்.

அதே நேரம் அந்த வழியாக காரில் வந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.முருகன், தியேட்டர் முன் பள்ளி சீருடையில் மாணவர்கள் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி சென்று, அங்கிருந்தவர்கள் உதவியுடன், அங்கு நின்றிருந்த 17 மாணவர்களையும் பிடித்து, தனது அலுவலகத்துக்கு அழைத்து வந்தார்.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் முதன்மை கல்வி அதிகாரி விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் 9&ம் வகுப்பு முதல் பிளஸ்&2 வரை படிக்கும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் என்று தெரியவந்தது. உடனே அந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்து, அனைவரையும் முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வரவழைத்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.முருகன் கூறியதாவது:-
தற்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. மேலும் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வுகள் நெருங்கி விட்ட நிலையில், மாணவர்கள் வகுப்புக்கு வராமல் புறக்கணித்து விட்டு சினிமாவுக்கு சென்றதால் அந்த 17 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளேன். மேலும் அந்த மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியர்களை சந்திக்க வேண்டும் என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதன்மைகல்வி அதிகாரி ஆர்.முருகன் கூறினார். முதன்மை கல்வி அதிகாரியின் இந்த அதிரடி நடவடிக்கை மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

0 Comments