இன்று (செப்.,20) ரயில்வே பாதுகாப்பு படை தினம் ; பயணிகள் உைடமைகளை பாதுகாக்கும் ரயில்வே படை

ரயில்வே பாதுகாப்பு படை (செக்யூரிட்டி படை) உருவாக்கப்பட்ட போது பணி விதிகள், ஆயுதங்கள் இல்லாததால் அவர்களால் பாதுகாப்பு பணியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. இதனால் 1985 செப்.,20ல் 'செக்யூரிட்டி படை', 'ரயில்வே பாதுகாப்பு படை'யாக மாற்றப்பட்டது. அதிகாரங்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்கப்பட்டன. இந்திய ரயில்வேயின் நேரடி கட்டுப்பாட்டில் டி.ஜி.பி., தலைமையில் பாதுகாப்பு படை இயங்குகிறது; இதன் தலைமையகம் டில்லியில் உள்ளது.


இந்த படைக்கு ரயில்வே தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். புதிதாக தேர்வு செய்யப்படுவோருக்கு லக்னோ ஜகஜீவன்ராம் ரயில்வே பாதுகாப்புபடை பயிற்சி பள்ளி மூலம் ஆரம்ப கட்ட, புதுமுக, சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் தற்போது 65 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். ரயில்வே பாதுகாப்பு படை உருவான செப்.,20ல் 'ரயில்வே பாதுகாப்பு படை தினமாக' கொண்டாடப்படுகிறது.குறிக்கோள்: ரயில்வே பொருட்கள், பயணிகளின் உடைமைகளை பாதுகாத்தல், தீப்பற்றும் பொருட்கள் கொண்டு செல்வதை தடுத்தல், நாசவேலைகள், சதிகாரர்களை கண்காணித்தல், பிச்சைக்காரர்கள், தேவையில்லாத நபர்கள் ரயிலில் ஏறுவதை தடுத்தல் போன்ற பணிகளை பாதுகாப்பு படை போலீசார் மேற்கொள்கின்றனர்.பணி விதி: ரயில் பாதுகாப்புக்கு செல்லும் போலீசார் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே பிளாட்பாரத்திற்கு சென்றுவிட வேண்டும். துப்பாக்கியில் தோட்டாக்கள், வயர்லஸ், டார்ச்லைட் கையில் வைத்திருக்க வேண்டும். குற்றவாளிகளின் புகைப்படம், பாதுகாப்பு பணி கையேடு, பயணிகளுக்கான ஆலோசனை படிவம், எப்.ஐ.ஆர்., படிவம், ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும்.



ஆலோசனை:



பெண்கள் நகைகளுடன் ரயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தால் அவர்களை கவனமுடன் இருக்க இவர்கள் எச்சரிக்கின்றனர். ஸ்டேஷன் இல்லாத இடங்களில் ரயில் நின்றால் உடனடியாக அங்கு சென்று பாதுகாப்பு கொடுக்கின்றனர். ரயில் விபத்துகளை கண்காணிக்கின்றனர். பற்றாக்குறை: நாடு முழுவதும் ரயில்வே பாதுகாப்பு படை ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் முக்கிய ரயில்களில் மட்டுமே பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் குற்றங்களை தடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது புதிதாக 20,000 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் தென்னக ரயில்வேக்கு மட்டும் 1,050 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கூறியதாவது: போலீஸ் ஸ்டேஷன் உள்ள இடங்களில் ரத்ததானம், கண்தானம் அளிக்கிறோம். பிரதமர் மோடி உத்தரவின்படி செப்., 20 முதல் ஒரு வாரத்திற்கு ரயில்வே ஸ்டேஷன்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடபட உள்ளோம்.ஆளில்லா 'லெவல் கிராசிங்' பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ரயில்வே பொருட்களை திருடினால் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்கிறோம்.இவ்வாறு கூறினார்.

Post a Comment

0 Comments