பல்கலை. படிப்புகளில் வெளிநாட்டினரைச் சேர்க்க அனுமதி பெறுவது கட்டாயம்: யுஜிசி புதிய உத்தரவு

இந்தியப் பல்கலைக்கழகங்கள் தாங்கள் வழங்கும் படிப்புத் திட்டங்களில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கு முன்பு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யுஜிசி) அனுமதி பெறுவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் யுஜிசி செயலர் எஸ். ஜஸ்பால் சாந்து அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

சில பல்கலைக்கழகங்களும், இணைப்புக் கல்லூரிகளும் நேரடியாகவும், முகவர்கள் மூலமாகவும் தங்களுடைய கல்வித் திட்டங்களில் வெளிநாட்டினரைச் சேர்த்து வருகின்றனர். இந்த நடைமுறைகளில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன.

இதுபோன்ற நடவடிக்கைகள் இந்தியப் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதோடு, நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துவிட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

எனவே, இதுபோன்ற மாணவர் சேர்க்கையில் ஈடுபடும் பல்கலைக்கழகங்கள் இந்தியத் தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதோடு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அல்லது யுஜிசி-யிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயமாகும் எனத் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments