மருத்துவக் கலந்தாய்வில் முறைகேடு: 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

புதுச்சேரியில் "சென்டாக்' மருத்துவ மாணவர் சேர்க்கையில் போலிச் சான்றிதழ்கள் அளித்தது தொடர்பாக வில்லியனூரைச் சேர்ந்த 3 வருவாய்த் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். புதுவையில் மருத்துவ, பொறியியல் பாடப்பிரிவு அரசு ஒதுக்கீட்டு இடங்கள் "சென்டாக்' கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் அரசே செலுத்துகிறது.

இந்நிலையில் "சென்டாக்' மருத்துவ மாணவர் சேர்க்கையில் போலிச் சான்றிதழ்கள் வழங்கி புதுவையைச் சேராதவர்கள் கல்லூரிகளில் சேர்ந்ததாக புகார்கள் எழுந்தன. சட்டப்பேரவையிலும் இது குறித்து அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் புகார் செய்தார். புதுவை மாணவர், பெற்றோர் நலச் சங்கமும் பல்வேறு புகார்களை அளித்தது.

போலிச் சான்றிதழ் விநியோகம் செய்ததாக புதுவை துணை வட்டாட்சியர் ஜெயகுமார், வருவாய் ஆய்வாளர் சம்பத், கிராம நிர்வாக அலுவலர் ஜெயபாலாஜி ஆகியோரை பணி இடைநீக்கம் செய்துள்ளதாக முதல்வர் அறிவித்தார்.

இதையடுத்து, சான்றிதழ்களை ஆய்வு செய்ய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 399 மாணவர்களின் சான்றுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதையடுத்து, ஐந்து இடங்கள் காலியானதாக தெரிவிக்கப்பட்டது. காலியான இடங்களுக்கு திங்கள்கிழமை இறுதிக் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. ஐந்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டன. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மாணவர் ஒருவர் தனியார் மருத்துவக் கல்லூரியிலிருந்து விலகினார். இதையடுத்து காலியான இடத்துக்கு கடைசி நாளான செவ்வாய்க்கிழமை சிறப்புக் கலந்தாய்வு நடந்தப்பட்டு நிரப்பப்பட்டது. ஒரு இடத்துக்கான கவுன்சலிங்கில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதனிடையே, போலிச் சான்று விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்திய குழுவினரின் நடவடிக்கையும் தொடங்கியுள்ளது. வில்லியனூரைச் சேர்ந்த துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களது பெயர் விவரம் தெரியவில்லை.

சுயேச்சையான அமைப்பு: புதுச்சேரியில் சென்டாக் முறைகேடு கடந்த 2005ஆம் ஆண்டில் இருந்தே நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது துணை மருத்துவம், பொறியியல் பாடப் பிரிவுகளிலும் ஏராளமானோர் போலிச் சான்றிதழ் அளித்து சேர்ந்திருக்கலாம் என்றும், புதுவை அரசு சுயேச்சையான அமைப்பு மூலம் "சென்டாக்' முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன

Post a Comment

0 Comments