பெட்ரோல் விலை 65 காசு குறைப்பு: டீசல் விலை மோடி நாடு திரும்பியதும் அறிவிப்பு

பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 65 காசு நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டது. மானியமில்லாத சமையல் காஸ் சிலிண்டர் விலையிலும், 21 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு கைவிட்டு விட்டதால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பெட்ரோல் விலையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.அதேநேரத்தில், டீசல் மீதான விலை கட்டுப்பாடு தொடர்ந்தது. இந்நிலையில் 2013 ஜன., 17முதல், டீசல் விலை ஒவ்வொரு மாதமும், லிட்டருக்கு, 50 காசுகள் உயர்த்தப்பட்டது. தற்போது டீசலின் இறக்குமதி செலவுக்கும், சில்லரை விற்பனை விலைக்கும் இடையேயான வேறுபாடு குறைந்து விட்டது. அதற்குப் பதிலாக, 1 ரூபாய் அளவுக்கு, விலை அதிகமாகவே டீசல் விற்கப்படுகிறது.இந்நிலை நீடித்தால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் டீசல் விற்பனை குறைந்து, தனியார் நிறுவனங்களின் விற்பனை அதிகரிக்கலாம். அதைத் தவிர்க்க, டீசல் விலை, லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, பிரதமர் மோடி இன்று நாடு திரும்பியதும் வெளியிடப்படும்.

எனினும், நேற்று நள்ளிரவு முதல், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 65 காசுகள் குறைக்கப்பட்டன. மானியம் வழங்கப்படாத, வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்களின் விலையில், 21 ரூபாய், நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டது. டீசல் விலை, கடைசியாக, 2009 ஜன., 29ல், லிட்டருக்கு, 2 ரூபாய் குறைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments