ஒரே நாளில் 20 ஆசிரியர்கள் விடுப்பு !

ஒரே நாளில் 20 ஆசிரியர்கள் விடுப்பு எடுத்ததால், திருத்தங்கல் அரசு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இப்படி செயல்பட்டால் விருதுநகர் மாவட்டம் எப்படி நூறு சதவீத தேர்ச்சி இலக்கை எட்டுவது? என பெற்றோர்கள் புலம்புகின்றனர்.



கல்வியை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் பலகோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல், பள்ளி உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வியை தொடர வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டு கல்வியின் தரத்தை மேம்படுத்த தீவிரம் காட்டப்படுகிறது.

அரசு எவ்வளவுதான் முயற்சிகள் செய்தாலும் ஆசிரியர்கள் முழு ஈடுபாடு பணியாற்றினால்தான் அரசின் நோக்கம் நிறைவேறும். விருதுநகர் மாவட்டம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 25 ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பெற்று வந்தது. கடந்த ஆண்டுகளில் இந்த தேர்ச்சி சதவீதம் குறைந்து முதலிடத்தை தக்க வைக்க முடியாமல் போனது. பொது தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் அதிகாரிகளும் தொடர் முயற்சி மேற்கொள்கின்றனர்.

ஆனாலும் எதிர்பார்த்த தேர்ச்சி சதவீதத்தை அரசு பள்ளிகளால் இன்னும் எட்ட முடிவதில்லை. அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் தங்களின் தேர்ச்சி சதவீதத்தை தக்க வைக்க பொது தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தி வருகின்றன. சில தனியார் பள்ளிகளில் விடுமுறை நாட்களில் கூட 10, பிளஸ் 2 மாணவர்களை வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர்.

உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இதுபோல் செயல்படும் நிலையில் திருத்தங்கல் எஸ்.ஆர்., அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்பாடு வித்தியாசமாகவும், வேதனையாகவும் உள்ளது. இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் ஒரே நாளில் 20பேர் விடுப்பு எடுத்ததால் பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் வராததால் விடுமுறை விடப்பட்டுள்ள தகவல் பெற்றோர்களை வேதனை அடைய செய்துள்ளது.

இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை 800 மாணவர்கள் படிக்கின்றனர். 27 வகுப்புகள் செயல்படுகின்றன. இங்கு ஆசிரியர் பணியிடம் 44ல் எட்டு பணியிடங்கள் காலியாக உள்ளன. 36 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இவர்களில் நேற்று 20 பேர் விடுப்பு எடுத்ததால் பாடம் நடத்த முடியாது, மாணவர்களையும் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதை காரணம் காட்டி பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது, பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நாளில் 20 பேர் விடுப்பு எடுத்தாலும் பள்ளிக்கே விடுமுறை விடப்படும் சூழ்நிலை என்பது மோசமானது. இப்படி அரசு பள்ளிக்கு விடுமுறை விட்டால், எப்படி விருதுநகர் மாவட்டம் நம்பர் 1 தேர்ச்சி இலக்கை எட்ட முடியும்.

ஆசிரியர் தரப்பில் கூறுகையில், "இந்த ஆண்டிற்கான விடுப்புகளை நேற்றுக்குள் எடுக்காவிட்டால் விடுப்பு நாள் காலாவதியாகி விடும் என்பதால், ஒரே நாளில் இப்படி விடுமுறை எடுத்து கொண்டனர்" என்றனர்.

திருத்தங்கல் மைக்கேல், "ஆசிரியர்கள் லீவு எடுத்ததற்காக பள்ளிக்கு விடுமுறை என்பது வேதனை அளிக்கிறது. அரசு பள்ளிகளில் இதுபோன்ற செயல்பாடுகளால்தான் பொது தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைகிறது. 20 ஆசிரியர்களுக்கு மேல் விடுப்பு எடுக்க அனுமதி வழங்கியது யார்? இப்படி இருந்தால் மாணவர்கள் எப்படி படிப்பார்கள்" என்றார்.

தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம், "ஆசிரியர்கள் அதிகளவில் லீவு எடுத்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறை நாளை (சனிக்கிழமை) மாற்று வேளை நாளாக செயல்படுத்த உள்ளோம். ஆசிரியர்கள் விடுமுறை தகவலை கல்வி அதிகாரிகளுக்கும் தெரிவித்துவிட்டேன்" என்றார்.

Post a Comment

3 Comments

  1. வணக்கம் நண்பர்களே!!! டி.ஆர்.பி எழுத இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!!

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..