காகிதம் (பேப்பர்) பிறந்த கதை!

எழுத்துக்கள் எப்படி தோன்றியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா நண்பர்களே., மனிதர்களின் நினைவாற்றலின் வலிமை ஒரு குறிப்பிட்ட எல்லையை கொண்டது,

அதாவது மனிதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அனைத்து விசயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அந்த நினைவாற்றலின் எல்லையை தாண்டியும் சில தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்ட போது தோன்றியது தான் எழுத்து. அன்றைய அரசாங்கத்தின் நிர்வாகத்துறையில் உள்ள வரவு செலவு கணக்குகளும், வணிகப்பரிமாற்றத்தின் பரிவர்த்தனைகளும் மனித நினைவாற்றலின் எல்லையை தாண்டி வளர்ந்தபோது அந்த கணக்குளை குறித்து வைத்துக்கொள்ள தோன்றியது தான் எழுத்து.
அன்றைய ஆதிமனிதன் முதன் முதலில் எழுத்துக்களை பதித்து வைத்தது கற்களின் மீதுதான், எழுதப்பட்ட கற்களை தேவை ஏற்பட்டபோது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிக்கல்களை தொடர்ந்து, விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளின் மீதும் மனிதன் எழுதத் துவங்கினான். நாளடைவில் இதிலும் ஏற்பட்ட portability குறைபாடு அவனை களிமண் தகடுகளின் மீது எழுதச் செய்தது. களிமண் தகடுகளை கையாள்வது சுலபமாக இருந்தாலும், அவற்றை வைத்து பராமரிக்க அதிக இடம் தேவைப்பட்டதால், இதுவும் தோல்வியுற்றது.
இன்று நாம் எழுதுவதற்க்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் பேப்பர்களின் தோற்றத்தையொத்த பொருளில், உலகில் முதன் முதலில் எழுதியவர்கள் எகிப்தியர்கள் தான். கி.மு. ஏழாம் நூற்றாண்டில் எகிப்தின் நைல் நதியின் டெல்டா பகுதியில் விளைந்த, இரெண்டு முதல் மூன்று மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு தாவரம் பாப்பிரஸ் (Cyperus Papyrus ஆகும். இந்த பாப்பிரஸ் தாவரத்தின் தண்டுபகுதியை நுண்ணிய துண்டுகளாக வெட்டி, அதனுடன் நீர் மற்றும் சில தாதுக்களை சேர்த்து பதப்படுத்தி பின்பு அதனை சூரிய ஒளியில நன்றாக உலரவைத்து, பின்பு அதனை எழுதுவதற்கென்று பயன்படுத்தி வந்தனர் அன்றைய எகிப்தியர்கள். இதுதான் மனிதன் முதன் முதலில் பேப்பெரில் எழுதிய அனுபவம் ஆகும். மேலும் பேப்பர் (Paper) என்ற சொல்லும் பாப்பிரஸ் (Papyrus) என்ற சொல்லில் இருந்து பிறந்ததே ஆகும்.
எகிப்தியர்கள் பாப்பிரஸ் தாள்களில் எழுதிவந்த அதே கால கட்டத்தில் சீனர்கள் விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளிலும் தான் எழுதிவந்திருக்கிறார்கள். பண்டைய சீனாவில் கி.மு.206-ஆம் ஆண்டு முதல் கி.பி.220-ஆம் ஆண்டுவரை சங்கனை (Changan) தலைநகராக கொண்டு ஆட்சி செய்துவந்த ஹான் வம்சத்தினர் (Han Dynasty) காலத்தில் குய்யங்கில் (Guiyang – தற்போது இந்நகரம் லேய்யங் (Leiyang) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது) நீதிமன்ற ஆவன காப்பாளராக வேலை பார்த்து வந்தவர் கைய் லுன் (Cai Lun). அவரது காலத்தில் நீதிமன்ற குறிப்புகள் அனைத்தும் விலங்குகளின் எலும்புகளிலும், மூங்கில் தடிகளிலும் தான் எழுதப்பட்டு வந்தது. இவற்றை ஒரு இடத்திலிருந்து மற்றொறு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிரமத்தை தொடர்ந்து  கைய் லுன் மாற்று வழி பற்றி ஆராய ஆரம்பித்தார்.
கைய் லுன், கி.பி. 105-ல் மரநார்கள், தாவரத்தின் இலைகள், மீன்பிடி வலைகள், மற்றும் துணி கழிவுகள் ஆகியவற்றை கொண்டுபேப்பேர் தயாரிக்கும் முறையை கண்டறிந்தார். கைய் லுனின் இந்த கண்டுபிடிப்பை பாராட்டி அப்போதைய அரசாங்கம் அவருக்கு பதவியுயர்வும், பொற்கிழியும் வழங்கி கெளரவித்தது. இம்முறையில் கண்டறியப்பட்ட காகிதம் சற்று தடிமனாக இருந்தது அதாவது சற்றேறக்குறைய 5mm வரை தடிமனாக இருந்தது. சிறிது காலத்திற்கு பிறகு கைய் லுன் தற்செயலாக ஒரு காட்சியை காண நேரிட்டது அது என்னவென்றால் ஒரு வகை குளவி (Wasp) மரத்தை துளையிட்டு அதம் மூலம் கிடைத்த சிறு மரத்துகள்களை கொண்டு தனது கூட்டை வலிமையாக கட்டிக்கொள்வதை கண்டார், அப்போதுதான் மரத்தை கூழ்மமாக அரைத்தால் பேப்பரை நாம் விரும்பும் வடிவில் மற்றும் அளவில் தயாரித்துக்கொள்ளலாம் என்பதை அறிந்துகொண்டார். அதனை தொடர்ந்து மரத்தை அரைக்கும் ஆலை நிறுவப்பட்டு பேப்பர் தயாரிக்கப்பட்டது. கி.பி. 105-ல் பேப்பர் தயாரிக்கும் முறை கண்டறியப்பட்டுவிட்டாலும் உலகிற்கு பகிரங்கமாக பேப்பர் தயாரிக்கும் தொழில்நுட்பமுறை அறிவிக்கபடவில்லை. சீனர்கள் ஏறக்குறைய அத்தொழில்நுட்பத்தை 500 ஆண்டுகளுக்கும் மேலாக ரகசியமாகவே வைத்து பாதுகாத்துள்ளனர்.
கி.பி.751-ல் சீனர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே தற்போதைய உஸ்பெகிஸ்தானில் டாலஸ் (Battle of Talas)  என்ற போர் ஏற்பட்டது. கிர்கிஸ்தானுக்காக நிகழ்ந்த இந்த டாலஸ் போரில் (Battle of Talas) சீனப்படைகள் அரேபிய படைகளிடம் தோல்வியை தழுவியது, அப்போது அரேபியர்களால் போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்ட இரு சீனவீரர்களிடம் இருந்து பேப்பர் தாயாரிக்கும் தொழில்நுட்பத்தை அரேபியர்கள் அறிந்துகொண்டனர். அத்தொழில்நுட்பத்தை கொண்டு உஸ்பெகிஸ்தானிலுள்ள சமர்கண்ட் (Samarkand) என்ற நகரில் அதிகாரப்பூர்வமான முதல் பேப்பர் தயாரிக்கும் ஆலையை அரேபியர்கள் நிறுவினார்கள், அதனை தொடர்ந்து ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் ஒரு ஆலை நிறுவப்பட்டது. பாக்தாத்திலிருந்துதான் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பேப்பர் தயாரிக்கும் தொழில்நுட்பம் பரவியது.
பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் பேப்பர் கடும் நிறம் (கால்நடைகளின் சான நிறம்) கொண்டதாகத்தான் இருந்தது, 1844-ஆம் ஆண்டு சார்லஸ் (Charles Fenerty) மற்றும் கெல்லர் (Gottlob Keller) ஆகியோர் இணைந்து வெள்ளை நிற பேப்பரை உருவாக்கும் தொழில் நுட்பத்தினை கண்டறிந்தார்கள். அன்றுமுதல் வெள்ளை நிற காகிதம் தயாரிக்கப்பட்டு வருகிறது. நாம் வீணடிக்கும் ஒவ்வொரு பேப்பரிலும் ஒரு மரத்தின் உயிர் வீணடிக்க படுகிறது என்பதை மனதில் கொண்டு பேப்பர்களை மிக சிக்கனமான உபயோகித்து சுற்றுசூழலுக்கு நம்மால ஆன நன்மையை செய்திடுவோம் என்று கூறிக்கொண்டு இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
நன்றி: வரலாற்று சுவடுகள்

Post a Comment

0 Comments