ஒரு நாளைக்கு ரூ.6 கோடி வீதம் தனது சொத்தை செலவழிக்க பில் கேட்ஸ்க்கு 218 ஆண்டுகள் தேவை!

நியூயார்க்: உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் 2வது இடத்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ், தினமும் ரூ.6 கோடி என்ற அளவில் செலவழித்தால், தனது சொத்தை முழுமையாக செலவழிக்க 218 ஆண்டுகள் தேவைப்படும்.
ஆக்ஸ்பாம் என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உலகின் பொருளாதார வேறுபாடுகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உலகப் பணக்காரர்கள் அவர்களுடைய தற்போதைய சொத்துகளை செலவழிக்க எவ்வளவு காலம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் விவரம்: மார்ச் 2013 முதல் மார்ச் 2014ம் ஆண்டுக்குள் உலகின் மிகப் பெரிய 85 பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து ஒரு நாளைக்கு ரூ.4,000 கோடி வீதம் உயர்ந்துள்ளது.உலக மக்கள் தொகையை பணக்காரர்கள் வரிசையில் பிரித்தால், கீழ் நிலையில் உள்ள 50 சதவீதத்தினரின் சொத்து மதிப்பும், இந்த 85 பணக்காரர்களின் சொத்து மதிப்பும் சமமாக இருக்கும். 

உலகப் பணகாரர்கள் வரிசையில் 2வது இடத்தில் உள்ளார் பில் கேட்ஸ். அதே நேரத்தில் பல்வேறு பொது காரியங்களுக்கு நன்கொடைகளை வாரி வழங்கி வருகிறார். இதற்கு மேல் சம்பாதிக்காவிட்டாலும், ஏற்கெனவே உள்ள சொத்துக்கள் மூலம் தினசரி ரூ.25 கோடி வட்டியாக மட்டுமே பில் கேட்ஸ்க்கு கிடைக்கும¢. தற்போது பில் கேட்ஸின் சொத்து மதிப்பு ரூ.4.74 லட்சம் கோடியாகும். ஒரு நாளைக்கு ரூ.6 கோடி என்ற அளவுக்கு செலவழித்தாலும், தனது சொத்தை முழுவதுமாக செலவிட பில் கேட்ஸ்க்கு 218 ஆண்டுகள் தேவைப்படும். உலகப் பணக்காரர் வரிசையில் முதலிடத்தில் உள்ள மெக்சிகோவை சேர்ந்த கார்லோஸ் ஸ்லிம்க்கு தனது மொத்த சொத்தான ரூ.4.8 லட்சம் கோடியை செலவிட 220 ஆண்டுகள் தேவைப்படும். 

இந்தியாவில்: இந்த அறிக்கையில், இந்தியாவில் உள்ள பொருளாதார வேறுபாடுகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. அதில் “இந்தியாவில் வறுமையில் வாடுவார் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதே நேரத்தில் பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 1990களில் 2ஆக இருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை தற்போது 65ஆக உயர்ந்துள்ளது. இந்த கோடீஸ்வர்களின் மொத்த சொத்து மதிப்பைக் கொண்டு நாட்டில் உள்ள வறுமையை இரு முறை ஒழிக்க முடியும்.’’இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments