பார்த்தீனியத்தை அழிக்கும் 'மெக்சிக்கன்' வண்டுகள்: காந்திகிராமத்தில் வினியோகம்!

பார்த்தீனிய செடிகளை அழிக்கும் 'மெக்சிக்கன்' வண்டுகள், காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையத்தில் இலவசமாக வினியோகிக்கப்படுகிறது.

இந்தியாவில் பார்த்தீனிய செடிகள் 100 லட்சம் எக்டேரில் பரவியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
விவசாய நிலங்கள், ரோடு, தண்டவாள ஓரங்கள், குடியிருப்புகளில் இந்த செடிகள் காணப்படுகின்றன. தோல் ஒவ்வாமை, ஆஸ்துமா, காய்ச்சல் போன்றவற்றை இவை ஏற்படுத்துகின்றன. பார்த்தீனிய செடிகளை அழிப்பது அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. ஒரு செடி 25 ஆயிரம் விதைகளை உற்பத்தி செய்யும் என்பதால் எளிதாக எல்லா இடங்களில் வியாபித்துள்ளது.
இவற்றை முழுமையாக அழிக்க 'மெக்சிக்கன்' வண்டுகள் பயன்படுமென மத்திய பிரதேசம் ஜபல்பூர் வேளாண் களைக்கொல்லி ஆராய்ச்சி நிலையத்தினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த வண்டுகளை உற்பத்தி செய்து காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையம் இலவசமாக வினியோகித்து வருகிறது.
அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியதாவது:'பார்த்தீனியம் செடிகளை வேரோடு பிடுங்கி அப்புறப்படுத்தலாம். அல்லது களைக்கொல்லி மூலம் அழிக்கலாம். இருப்பினும் இவற்றை முழுமையாக அழிக்க முடியாது. தேவையில்லாத செலவு ஏற்படும். 'மெக்சிக்கன்' வண்டுகள் பார்த்தீனிய செடிகளின் பூ, விதைகளை உணவாக உட்கொள்வதால் மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கப்படுகிறது.
இந்த வண்டுகள் குறைந்த ஆயுட்காலம் கொண்டவை. இவற்றை பயன்படுத்துவதால் பிற செடிகளுக்கும், பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது. ஜபல்பூர் வேளாண் களைக்கொல்லி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 500 வண்டுகளை வாங்கி வந்துள்ளோம். இதனை உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகிக்கிறோம்,'என்றார்.

Post a Comment

0 Comments