போலி சான்றிதழ் கொடுத்த மத்திய இணையமைச்சர் மீது வழக்கு பதிவு


நவம்பர் 9ம் தேதி மத்திய அமைச்சரவையில் கல்வித்துறை இணையமைச்சராக புதிதாக பதவியேற்ற ராம் சங்கர் கத்தேரியா மீது போலி சான்றிதழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பிறகு போலி சான்றிதழ் விவகாரத்தில் சிக்கி உள்ள இரண்டாவது அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


யார் இந்த கத்தேரியா?: ஆக்ரா பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர் ஆர்.எஸ்.கத்தேரியா. பின்னர் அரசியலுக்கு வந்த இவர், பா..,வில் இணைந்து தேர்தலிலும் வெற்றி பெற்றார். சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் இவருக்கும் இடம் அளிக்கப்பட்டது. அதன்படி, நவம்பர் 9ம் தேதி பதவியேற்ற 21 அமைச்சர்களில் ஒருவராக பதவியேற்ற இவருக்கு மத்திய கல்வித்துறையின் இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

போலி சான்றிதழ் வழக்கு: கத்தேரியா, பட்டப்படிப்பு 2ம் ஆண்டு படிக்கும் போது இந்தி இலக்கியத்தில் 43 மார்க்குகளும், ஆங்கிலத்தில் 42 மார்க்குகளும் வாங்கி உள்ளார். ஆனால் இந்த சான்றிதழை மாற்றி, இந்தி இலக்கியத்தில் 53 மார்க்குகள் வாங்கியதாகவும், ஆங்கிலத்தில் 52 மார்க்குகள் வாங்கியதாகவும் போலியாக சான்றிதழ் தயாரித்து ஆக்ரா பல்கலைகழகத்தில் வேலைக்கு சேரும் போது அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, பட்டமேற்படிப்பு 2ம் ஆண்டு படிக்கும் போதும் மொழியியல் பாடத்தில் இவர் வாங்கிய மார்க்குகள் 38. ஆனால், 72 மார்க்குகள் எடுத்தது போன்ற போலியான சான்றிதழை பல்கலைக்கழகத்தில் அளித்துள்ளார் என்றும், இது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது என்றும் புகார் எழுந்துள்ளது.

அமைச்சர் கருத்து: பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவரால் தொடரப்பட்ட இந்த வழக்கு குறித்து கத்தேரியா கூறுகையில், ’இந்த வழக்கை தொடர்ந்தவர், கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது என்னை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர். அதனால் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக என் மீது இந்த வழக்கை போட்டுள்ளார்.

நான் போலி சான்றிதழ் அளித்ததாக விசாரணை நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ள காலமும் உத்தரபிரதேசத்தில் மாயாவதி ஆட்சி நடைபெற்ற காலம். அதனால் இதில் எப்படி உண்மை இருக்க முடியும் என்றார். கத்தேரியா மீதுள்ள 21 வழக்குகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், அனைத்து பா.., தலைவர்கள் மீது பழி சுமத்துவதையே சமாஜ்வாதி வழக்கமாக கொண்டுள்ளது. இது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்ட வழக்கு என தெரிவித்துள்ளார்.

பதவி இழப்பாரா கத்தேரியா?: கத்தேரியா மீது சட்டப்பிரிவு 420ன் கீழ் ஏமாற்றுதல் மற்றும் நேர்மையின்மை ஆகிய குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை இவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால், இவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அளித்த தீர்ப்பின்படி, 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் அரசியல்வாதிகள் பதவி இழப்பதுடன், 10 ஆண்டுகள் தேர்தலிலும் போட்டியிட முடியாது.

Post a Comment

0 Comments