ஆவினைத் தொடர்ந்து தனியார் பால் விலையும் உயருகிறது!

தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வைத் தொடர்ந்து, தனியார் பால் விலையும் லிட்டருக்கு ரூ.8 உயருகிறது. இந்தப் புதிய விலையை ஓரிரு நாள்களில் அமல்படுத்த தனியார் பால் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

பால் கொள்முதல் விலை, மூலப்பொருள்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றைக் காரணம் காட்டி, நிகழாண்டில் தமிழகத்தில் நான்கு முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது ஐந்தாவது முறையாக பால் விலையை லிட்டருக்கு ரூ.6 முதல் ரூ.8 வரை உயர்த்த தனியார் பால் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி செய்தியாளர்களிடம் கூறியது:
ஆந்திரத்தைச் சேர்ந்த திருமலா, டோட்லா, ஹெரிடேஜ், ஜெர்சி ஆகிய 4 தனியார் பால் நிறுவனங்களும், நிகழாண்டில் இதுவரை நான்கு முறை பால் விலையை உயர்த்தி உள்ளன. மூன்று ஆண்டுகளில் இதுவரை 10 முறை பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது, நிகழாண்டில் ஐந்தாவது முறையாக பால் விலையை லிட்டருக்கு ரூ.6 முதல் ரூ.8 வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளன. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இன்னும் ஓரிரு நாள்களில், இந்தப் புதிய விலை உயர்வு அமலுக்கு வர வாய்ப்புள்ளது. இந்த நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவதால், தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இந்த நிறுவனங்களே தமிழகத்தில் அதிகமாக பால் விநியோகம் செய்து வருகின்றன.
விலை உயர்வால் பாதிக்கப்படுவது பொதுமக்களும், முகவர்களுமே. தமிழக அரசு இந்தப் பிரச்னையில் தலையிட்டு, தனியார் பால் விலையையும் அரசே நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் இயற்ற முன்வர வேண்டும்.
அதேபோல், பால் விலை உயர்வை முடிவு செய்ய 4 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இதில், ..எஸ். அதிகாரி, பொதுமக்களின் பிரதிநிதி, தனியார் பால் நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதி, பால் முகவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும்.
இவர்கள் முடிவு செய்யும் விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பால் முகவர்களின் இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலிக்காவிட்டால், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் முடிவு செய்துள்ளோம்.
தனியார் பால் நிறுவனமான திருமலாவை, பிரான்ஸ் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனமான லாக்டலிஸ் (கஹஸ்ரீற்ஹப்ண்ள்) நிறுவனம் வாங்கியுள்ளது. இதுபோன்று, இந்தியாவிலுள்ள பால் வளத்தையும் குறிவைத்து, அந்நிய நிறுவனங்கள் சுரண்டத் தொடங்கியுள்ளன.
பால் வளத்தைச் சுரண்டும் அந்நிய நிறுவனங்கள் குறித்து, நாடு முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்கள், முகவர்கள், வணிகர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஒன்று திரட்டி, விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் விழிப்புணர்வுப் பிரசாரம் தொடர்பான முழு விவரங்களை அறிவிப்போம் என்றார் பொன்னுசாமி.
தமிழகத்தில் பசும் பால், எருமைப் பாலுக்கான கொள்முதல் விலை முறையே லிட்டருக்கு ரூ.5-ம், ரூ.4-ம், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10-ம் உயர்த்தப்பட்டது. இந்தப் புதிய விலை உயர்வு கடந்த 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1.5 கோடி லிட்டர் பால் தேவை
தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 1.50 கோடி லிட்டர் பால் தேவைப்படுகிறது. இதில், 25 லட்சம் லிட்டர் பால் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மூலம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 1.25 கோடி லிட்டர் பால், தனியார் நிறுவனங்கள் மூலமே நிறைவு செய்யப்படுகிறது.
சென்னையில் நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. இதில், 11.50 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவனம் மூலமும், மீதமுள்ள 13.50 லட்சம் லிட்டர் பால், தனியார் நிறுவனம் மூலமும் பூர்த்தி செய்யப்படுகிறது. இதில், 7.50 லட்சம் லிட்டர் பால், தற்போது விலையை உயர்த்தும் குறிப்பிட்ட தனியார் பால் நிறுவனங்கள் மூலம் பெறப்படுகிறது.

Post a Comment

0 Comments