நினைவிருக்கிறதா?

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!



தலைமை ஆசிரியரின் நீண்ட கல்வித்துறை அனுபவமும், துணை ஆசிரியரின் இளமைத் துடிப்பான செயல்வேகமும்இணைந்து, தமிழகத்தின் குக்கிராமத்தில் அமைந்திருக்கும் அரசு ஆரம்பப் பள்ளியை சர்வதேச தரத்துக்கு உயர்த்தியிருக்கிறது!

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இருக்கிறது காரமடை. அங்கிருந்து சிறுமுகை செல்லும் பாதையில் ஐந்து கிலோ மீட்டர் பயணித்தால் வரும் குக்கிராமம் இராமம்பாளையம். 900 பேர் வசிக்கும் இக்கிராமம் ஜடையம்பாளையம் பஞ்சாயத்தின் கீழ் வருகிறது. கோவையிலிருந்து 38 கிலோ மீட்டர் தூரம்.

இங்கிருக்கும் ஆரம்பப் பள்ளி 1930ல் அரசு நலப்பள்ளியாக தொடங்கப்பட்டது. வைரவிழா கண்ட இப்பள்ளிக்கு சில ஆண்டுகளாக முன்பாக ஒரு பெரிய சோதனை. கிராம மக்கள் பலரும் இப்பள்ளியை புறக்கணித்து, தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க ஆரம்பித்தார்கள்.

தற்போது ஈராசிரியர் பள்ளியாகச் செயல்படும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் என்.சரஸ்வதி. உதவி ஆசிரியர் டி.பிராங்க்ளின். பொருளாதார ரீதியாக ஏழைகளாக இருந்தாலும் வீம்பாக அரசுப்பள்ளியை புறக்கணித்து, தனியார் பள்ளியை நாடி மக்கள் செல்வதை இவர்கள் கவலையோடு பார்த்தார்கள்.

பெரிய மாற்றம் ஒன்று ஏற்படாவிட்டால், வைரவிழா கண்ட பள்ளியின் நிலை கவலைக்கிடமாகி விடும். அரசுச் சொத்துகளை அன்னியமாக பார்க்கும் மனோபாவம் அவ்வூர் மக்களுக்கு மட்டுமில்லை. எல்லோருக்குமே இருக்கிறது. இப்பள்ளி தங்களுடைய சொத்து, இதை பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறையை மக்களுக்குள் விதைக்க வேண்டும்.

என்ன செய்யலாம்?

ஆசிரியர் பணி என்பது வெறுமனே போதித்தல் மட்டும்தானா என்கிற கேள்வி இருவருக்குள்ளும் எழுந்தது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும், தங்கள் பணி தாண்டி நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருக்கிறார்கள். அரசின் கீழ் பணிபுரியும் நாம், இந்தப் பள்ளியை மேன்மையான நிலைக்கு கொண்டு வந்தால் என்ன?

56 வயதாகும் தலைமையாசிரியர் இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெறப்போகிறார். துணை ஆசிரியரோ 35 வயது இளைஞர். தலைமுறை இடைவெளி இவர்களை விலக்கிடவில்லை. மாறாக தலைமை ஆசிரியரின் நீண்டகால கல்வி அனுபவமும், உதவி ஆசிரியரின் சாதிக்க வேண்டும் என்கிற லட்சிய வெறியும் இன்று இராமம்பாளையம் பள்ளியை சர்வதேசத் தரம் கொண்ட பள்ளியாக உயர்த்தியிருக்கிறது. ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை இயங்கும் இராமப்பாளையம் ஊராட்சி ஒன்றிட்யத் தொடக்கப் பள்ளியில் தற்போது 34 குழந்தைகள் படிக்கிறார்கள்.

நகர்ப்புற பள்ளிகளைக் காட்டிலும் தரமான கல்வியை, கட்டமைப்பை கிராமப்புற மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. நாங்கள் பணிபுரியும் இந்தப் பள்ளியையையே முன்மாதிரிப் பள்ளியாக உருவாக்கிவிட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இருவரும் ஆலோசித்தோம். அதுதான் ஆரம்பப் புள்ளிஎன்கிறார் தலைமையாசிரியர் சரஸ்வதி.

எங்கே ஆரம்பித்தார்கள்?

தங்களுடையசீக்ரட் ஆஃப் சக்ஸஸைவெளிப்படையாக போட்டு உடைக்கிறார் துணை ஆசிரியர் பிராங்க்ளின்.

முதலில் இந்தப் பள்ளியில் ஒரு மாற்றம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்கிற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்க முடிவெடுத்தோம். எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக இயங்கிவரும் பள்ளி என்றாலும், இங்கே ஆண்டுவிழா நடந்ததே இல்லை.

2009ல் முதன்முதலாக ஊர் பொதுமக்களை கூட்டி ஆண்டுவிழா நடத்தினோம். தங்கள் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளை கண்டவர்களுக்கு நம் குழந்தைகள் இத்தனை திறமையானவர்களா என்று ஆச்சரியம். வெளியூர்களிலிருந்து தன்முனைப்பு பேச்சாளர்களை அழைத்துவந்து அந்நிகழ்ச்சியில் பேசவும் வைத்தோம்.

முதன்முறையாக பள்ளி சார்பாக இப்படி ஒரு விழா நடந்ததை கண்ட மக்கள், ‘என்னப்பா விஷயம்?’ என்று அக்கறையாக கேட்க ஆரம்பித்தார்கள். எங்கள் கனவை சொன்னோம். ‘நல்ல விஷயம்தானே? செஞ்சுடலாம்என்றார்கள்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு கிராமக் கல்விக்குழு உண்டு. அவர்களும் எங்களோடு கைக்கோர்க்க, அனுமதிக்கு போய் நிற்கும்போதெல்லாம் தொடக்கக் கல்வி அலுவலர் ஊக்குவிக்க, இன்று எல்லோரும் அதிசயப்படும் பள்ளியை ஊர்கூடி அமைத்திருக்கிறோம்

நாலு பாராவில் பிராங்க்ளின் சொல்லிவிட்டாலும் ஆசிரியர்களின் இரண்டாண்டு கடினமான திட்டமிடுதலும், உழைப்பும், கல்விக்குழு மற்றும் கிராமமக்களின் பங்களிப்பும் இவ்வெற்றிக்குப் பின்னால் இருக்கிறது.

பளிச்சென்று சர்வதேசத் தரத்துக்கு ஒப்பாக இருக்கும் வகுப்பறை, கணினிப் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, யோகாப் பயிற்சி, ஓவியப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி, தலைமைத்துவப் பயிற்சி, தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை வாசிக்கப் பழக்கப் படுத்துதல் என்று போதிப்புத் தரத்தில் அயல்நாட்டுப் பள்ளிகளோடு போட்டிப்போடும் கல்வித் தரத்தையும், கட்டமைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள், கழுத்தணி (tie), காலணி (shoe), பெல்ட், அடையாள அட்டை, ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் இணைப்புக் கையேடு (Dairy) அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது.

இங்கு என்ன செய்யவேண்டும் என்பதற்கு எங்கேயும் இவர்களுக்கு முன்மாதிரி (reference) இல்லை. ஒரு வகுப்பறை எப்படியிருந்தால் நன்றாகயிருக்கும் என்று ஆசிரியர்கள் ஆசைப்பட்டதை எல்லாம் செய்திருக்கிறார்கள்.

மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக சுத்தமான கழிப்பறைகள் உருவாக்கித் தந்திருக்கிறார்கள். சுற்றுச்சுவர் கட்டும் பணி இன்னும் பாக்கியிருக்கிறது. மேலும் கொஞ்சம் நிதி சேர்ந்தால், இன்னும் சில கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித்தர முடியும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

பல லட்சம் செலவாகியிருக்குமே, இவற்றுக்கெல்லாம் ஆன செலவை எப்படி சமாளித்தார்கள்?

முதல் பங்களிப்பை ஆசிரியர்கள் இருவருமே செலுத்த, கல்விக்குழுவின் ஒத்துழைப்போடு ஊர் மக்கள் செலவினை பங்கிட்டுக் கொண்டார்கள். இந்த முன்மாதிரிப் பள்ளியை உருவாக்க இதுவரை ஆன செலவு தோராயமாக இரண்டரை லட்சம் மட்டும் தானாம்.

கடந்த ஜூன் 15ஆம் தேதி பணிகள் முடிந்து திறப்புவிழா எளிமையாக நடந்தது. இது ஒரு சாதனை என்கிற நினைப்பு அங்கே யாருக்குமே இல்லை. வெளியே தெரிந்தால், அனைவரும் கண்காட்சி போல பள்ளியைக் காண வந்துவிடுவார்களோ, அதனால் குழந்தைகளின் கவனம் சிதறுமோ என்று கவலைப்படுகிறார்கள் ஆசிரியர்கள்.

சரி, இந்த மாற்றங்களால் என்ன பலன்?

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் திரும்பவும் இந்தப் பள்ளிக்கு வருகிறார்கள். “எல்லாமே முற்றிலும் இலவசமா, தனியார் பள்ளியை விட தரமான கல்வி இங்கே கிடைக்கிறப்போ, நாங்க எதுக்கு தனியாருக்கு போகணும்? நாலாவது வரைக்கும் மெட்ரிக்குலேஷனில் படிச்ச என் பொண்ணு யாழினையை, ஐந்தாவதுக்கு இங்கேதான் சேர்த்திருக்கேன்என்கிறார் சரஸ்வதி வடிவேலு. வேறென்ன வேண்டும்?

தொடக்கக் கல்வி அலுவலகம் மூலமாக, இந்த விஷயம் மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரனுக்கு தெரியவந்திருக்கிறது. அவர்திடீர் விசிட்அடித்து பள்ளியை சுற்றிப் பார்த்து பாராட்டியிருக்கிறார். “கலெக்டர் எல்லாம் வந்து பார்த்துட்டுப் போறாருன்னா, நிஜமாவே நாங்க நல்ல விஷயம்தான் பண்ணியிருக்கோமுன்னு புரியுதுஎன்கிறார்கள் கிராம மக்கள்.

ஆசிரியர்கள் மாறக்கூடியவர்கள். ஆனால் கிராமமும், பள்ளியும் நிரந்தரமாக இங்கேயே இருக்கக் கூடியவை. பள்ளி, கிராமத்தின் சொத்து என்கிற உணர்வு ஒவ்வொரு கிராமத்தவருக்கும் வேண்டும். முன்பெல்லாம் பள்ளியில் என்ன நடந்தாலும், அதைப்பற்றி மக்களுக்கு பெரிய அக்கறை இருந்ததில்லை. இப்போது சுவரில் யாராவது கிறுக்கினாலோ, சுவரொட்டி ஒட்டினாலோ அவர்களை மக்களே தட்டிக் கேட்கிறார்கள். எங்கள் மக்களுக்கு கிடைத்த இந்த விழிப்புணர்வு தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும் பரவவேண்டும். அடுத்து வரும் ஆசிரியர்களிடமும் இதே அர்ப்பணிப்பை நாங்கள் உரிமையாக தட்டிக் கேட்போம்என்கிறார் கல்விக்குழு உறுப்பினரான ஆர்.மகேஷ்.
தமிழகத்தின் எல்லாக் கிராம ஆரம்பப் பள்ளிகளையும் இதேபோல செய்ய முடியாதா?

தாராளமாக செய்யலாம். அந்தந்த கிராம மக்கள், கல்விக்குழு, ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து செய்தால் செய்யலாம். இராமம்பாளையம் பள்ளியை முன்மாதிரியாகக் கொண்டு இப்போதே பணியை ஆரம்பித்தால் கூட, அடுத்த ஆண்டு தமிழகம் முழுக்க 40 சதவிகிதப் பள்ளிகளை இந்த தரத்தை எட்டச் செய்யலாம்என்கிறார் காரமடை ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.ராஜேந்திரன்.

இதே தரத்தை தொடர்ச்சியாக பரமாரிக்க, கணிசமான நிதி தேவைப்படும். பள்ளியின் தரம் உயர, உயர மாணவர் சேர்க்கை அதிகமாகும். கூடுதல் செலவுகள் ஏற்படும். அதற்கு என்னஐடியாவைத்திருக்கிறார்கள்?

ரொம்ப சுலபம். இந்த ஊரில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்ப்பவர்கள், அரசு வேலைகளில் இருப்பவர்கள், தனியார் நிறுவனங்களில் நல்ல பதவிகளில் இருப்பவர்கள் என்று குறைந்தது நூறு பேரை பட்டியலிட்டு வைத்திருக்கிறோம். இவர்களை வைத்துஇராமம்பாளையம் முன்னாள் மாணவர்கள் அமைப்புஒன்றினை உருவாக்க உத்தேசித்திருக்கிறோம். இவர்களிடம் ஆண்டுக்கு ஆயிரம் ரூபாயை நன்கொடையாகப் பெறுவது சுலபம். இதன் மூலம் வருடத்துக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும். இப்போதிருக்கும் தரத்தை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்ள இந்த தொகையே மிக அதிகம்என்கிறார் துணை ஆசிரியர் பிராங்க்ளின். நல்ல ஐடியாதான்.

ஊர் கூடி தேர் இழுத்தால் என்ன பயன், இதுபோல ஒரு பள்ளியை உருவாக்க முடிந்தால், காலாகாலத்துக்கும் ஊர் பெயரை உலகம் பேசுமே?


பள்ளியில் என்னென்ன வசதிகள்?

மாணவர்கள் குழுவாக அமர்ந்து பாடம் கற்க வட்ட மேசைகள்
புத்தகங்கள் வைக்க இடவசதியோடு கூடிய நாற்காலிகள்
தமிழ்ஆங்கில நூல்கள் அடங்கிய நூலகம்.
டி.வி.டிகள் அடங்கிய டிஜிட்டல் நூலகம்
கம்ப்யூட்டர்
தொலைக்காட்சிடிவிடி ப்ளேயருடன்
அறிவியல் ஆய்வு மற்றும் கணிதம் தொடர்பான உபகரணங்கள்
செயல்வழி கற்றல் அட்டைகளை வாசிக்க வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ள அலமாரிகள்
ஒலி-ஒளி அமைப்புகள்
மாணவர்கள் எழுதிப்பலக கீழ்மட்ட பச்சை வண்ணப்பலகை
படைப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு காட்சிப்பலகை
சுத்திகரிக்கப்பட்ட வெந்நீருடன் கூடிய குடிநீர் வசதி
காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு கண்ணாடி சன்னல்கள்
குழந்தைகளை கவரும் வகையில் சுவர் ஓவியங்கள்
உயர்தர தள கட்டமைப்பு
ஒலிபெருக்கியோடு கூடிய உட்கூரை
வேலைப்பாடுகள் நிறைந்த மர அலமாரிகள்
அவசரக்கால வழி, தீயணைப்புக் கருவி, முதலுதவிப் பெட்டி


Post a Comment

1 Comments

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..