நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செம்மேட்டில் தமிழக அரசின் உண்டு உறைவிட பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. கலைவாணி என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அருகில் உள்ள குடியிருப்பில் தங்கி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று தலைமை ஆசிரியையின் பெயருக்கு ஒரு தபால் வந்தது. அதில், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பழைய முறைப்படி சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும். இல்லையெனில், ஆசிரியர் குடியிருப்புக்கு வெடிகுண்டு வைக்கப்படும். மேலும், சேந்தமங்கலத்தில் உள்ள அரசியல்வாதிகளின் வீடுகளுக்கும் குண்டு வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிகமான எழுத்து பிழைகளுடன், கிறுக்கலாக அந்த கடிதம் காணப்பட்டது. தலைமை ஆசிரியை கலைவாணி, கொடுத்த புகாரின் பேரில், வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.