சேலம்- ஆத்தூர் அருகே, அபிநவம் ஏகலைவா அரசு மாதிரி உறைவிட பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த, அமைச்சரின் உறவினரான கணித ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி, மலைவாழ் மக்கள் சங்கத்தினர், கண்டன போராட்டம் நடத்தினர்.

ஆத்தூர் அருகே, ஏத்தாப்பூர், அபிநவம் ஏகலைவா அரசு மாதிரி உண்டு உறைவிட பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில், 388 மாணவியர், தங்கி படிக்கின்றனர். ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவியரிடம், 5,000 ரூபாயும், மற்ற மாணவியரிடம், 3,000 ரூபாய் வரை, வசூல் செய்கின்றனர்.கணித ஆசிரியர் கார்த்திகேயன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் சுப்ரமணியன் உடன் பிறந்த தங்கை செல்லமணி மகன் என்பதால், அவரது செயலை கண்டிக்கும் ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டனர்.ஆசிரியர் கார்த்திகேயன், மாணவியரிடம், ஆபாச செய்கை மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தும், ஒரு மாணவியை, காம்பஸ் கருவியில் குத்தி காயப்படுத்தியுள்ளார். தலைமை ஆசிரியர் கலாமோகினி, ஆசிரியர்கள் கார்த்திகேயன், முருகேசன் ஆகியோர் மீது, கடந்த, 7ம் தேதி, மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள், சேலம் மாவட்ட கலெக்டரிடம், புகார் மனு அளித்தனர்.ஆசிரியர்கள் மீது, மாவட்ட கலெக்டர், கல்வித்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, நேற்று, ஆத்தூர் அருகே, புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாபில், மலைவாழ் மக்கள் சங்க, மாநில தலைவர் சண்முகம் தலைமையில், கண்டன போராட்டம் நடந்தது.