இந்தியப் பெருங்கடலில் சீன ஆதிக்கம்: முறியடிக்க இந்தியா, அமெ., திட்டம்

புதுடில்லி: இந்தியப் பெருங்கடலில் சீன போர்க்கப்பல்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து, இரு நாட்டு ராணுவ பயிற்சி ஒத்திகையை மேலும் அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

இந்த பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு மேலும் பல நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுஇந்தியாவி்ன் எல்லை பகுதிகளில் ஊடுருவி, நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா, இந்தியப் பெருங்கடலிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆசியாவின் வல்லரசாக விரும்பும் சீனா, கடல் பரப்பில் அதன் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஏராளமான போர்க்கப்பல்களை உலாவ விட்டு வருகிறது. குறிப்பாக, அணுஆயுதங்கள் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்கள் அதிகமாக நடமாடுகின்றன. இது குறித்து சீனாவிடம் இந்தியா விளக்கம் கேட்டபோது, கடற்கொள்ளைகளை தடுக்க போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறி, சீனா சமாளித்தது. சீன போர்க்கப்பல்களின் நடமாட்டம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கடந்த ஆண்டு ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் விமானம் தாங்கி கப்பலான .என்.எஸ்., விக்ரமாதித்யா இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த கப்பலை, அணு ஆயுதம் தாக்கிய ஒரு சீன நீர்மூழ்கி கப்பல் தொடர்ந்து வந்து கண்காணித்தது. ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அதே நிலைப்பாட்டை கொண்டுள்ள அமெரிக்கா இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது.
இலங்கைக்கு எச்சரிக்கை:

கடந்த சில மாதங்களாக இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் போர்கப்பல்கள், அணு ஆயுதம் தாங்கிய நீர்முழ்கி கப்பல்களின் நடமாட்டம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாகி உள்ளது. சமீபத்தில், அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்கள் இரண்டு, இலங்கை, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டு நின்றன. சீனாவின் போர்க்கப்பல்களுக்கு இலங்கை இடம் அளித்தது இந்தியாவை எரிச்சல்படுத்தியது. இதையடுத்து, இது குறித்து இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
முறியடிக்க திட்டம்:

சீனாவின் கடல் ஆதிக்கத்தை முறியடிக்க இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து திட்டம் தீட்டி உள்ளன. இதன்படி, இந்திய பெருங்கடலில் இருநாட்டு கப்பல் படைகளும் கூட்டு பயிற்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்கா வௌியிட்டுள்ள ஒரு அறிக்கையில், 'இந்தியாவுடன் இணைந்து போர்க்கப்பல்கள், அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்கள் கொண்ட போர் பயிற்சி இந்திய பெருங்கடலில் தொடர்ந்து நடத்தப்படும்,' என கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளுக்கு அழைப்பு:

இந்திய, அமெரிக்க போர் பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு மற்ற நாடுகளுக்கும் அழைப்பு விட இந்தியாவும், அமெரிக்காவும் முடிவு செய்துள்ளன. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மலபார் எக்சர்சைஸ் என்ற பெயரில் இதுபோன்ற போர் ஒத்திகை நடத்தப்பட்டது. கடந்த ஜூலையில் நடந்த போர் பயிற்சியில் ஜப்பான் கலந்து கொண்டது. இந்த தொடர் பயிற்சிகளின் மூலம், சீனா தனது அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை இந்திய பெருங்கடலில் செலுத்துவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments