மின் வாரியத்தில் 5,000 ஊழியர்களை நியமிக்க முடிவு

ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க, மின் வாரியத்தில், புதிதாக, 5,000 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்; தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்களாக செயல்படுகின்றன.

88ஆயிரம் பேர்:மின் வாரியத்தில், அதிகாரி, பொறியாளர், உதவியாளர் என, 1.38 லட்சம் பணியிடங்களுக்கு, அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது, 88 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். 50 ஆயிரம் பணிஇடங்கள் காலியாக உள்ளன.ஊழியர் பற்றாக்குறையால், மின் வினியோகம், பராமரிப்பு உள்ளிட்ட ஏராளமான பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால், ஊழியர்களுக்கு, கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, 'காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்' என, மின்வாரிய தொழிற்சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து, 4,000 கள உதவியாளர்கள், 1,000 கணக்கீட்டாளர்கள், 275 உதவி பொறியாளர் கள், 1,000 தொழில்நுட்ப உதவியாளர்கள் என, 6,275 பணிஇடங்கள் நிரப்பப்பட்டன.

மீண்டும் உயர்வு:கடந்த, ஆறு மாதங்களில், மின் வாரியத்தில், இயக்குனர்கள், தலைமை பொறியாளர்கள் உள்ளிட்ட, 7,500க்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்றனர். இதனால், காலி பணியிடங்கள் எண்ணிக்கை, மீண்டும் கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளது.

இதையடுத்து, இளநிலை உதவியாளர், வரைவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு, புதிதாக, 5,000 ஊழியர்களை நியமிக்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

நிதி நெருக்கடி:இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள், அடுத்த, மூன்று ஆண்டுகளில், ஓய்வு பெற உள்ளனர். நிதி நெருக்கடி காரணமாக, புதிதாக ஊழியர்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

தற்போது, மின் கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதால், அதன் மூலம், மின் வாரியத்தின் வருவாய் பற்றாக்குறை, சரிவடைய வாய்ப்புள்ளது.இதனால், காலி பணியிடங்களால் ஏற்பட்டுள்ள தொய்வை சமாளிக்க, 5,000 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்

Post a Comment

0 Comments