கடலின் அலையும், நகரும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பார்கள். யாரிடமும் வாங்க முடியாத, யாருக்கும் கொடுக்க முடியாத ஓர் உன்னத பொருள் 'நேரம்'.

உங்கள் கடிகாரத்தைக் கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக வினாடிகள், நிமிடங்கள், மணிகள் என ஓடிக் கொண்டே இருக்கிறது. காலையில் வேகமாகவும், மதியம் சோர்வாகவும், மாலையில் தூங்கியபடியும் அது ஓடுவதில்லை. ஆனால் நாமோ நம்முடைய மனநிலைக்கு ஏற்ப, 'டைம் செம பாஸ்டா ஓடிடுச்சு', 'நேரம் போகவே மாட்டேங்குது' என காலத்தைக் குறை சொல்கிறோம்.

ஒன்பது மணிக்கு துவங்கும் அலுவலகத்திற்கு எத்தனை பேர் சரியான நேரத்தில் வருகிறார்கள்? ஒன்பது மணிக்கு நடைபெறும் மீட்டிங்கிற்கு எத்தனை பேர் தாமதமின்றி வந்து சேர்கிறார்கள்? 'பத்து நிமிடம் லேட்டா போனா ஒண்ணும் ஆவாது' என்பதுதானே பலருடைய மனநிலை?

'மூன்று மணி நேரம் சீக்கிரமாகச் செல்வது, ஒரு நிமிடம் தாமதமாகப் போவதை விட மிகச் சிறந்தது' என்கிறார் ஷேக்ஸ்பியர். நேரம் தவறாமையை அவர் எந்த அளவுக்கு மதித்தார் என்பதற்கு இந்த ஒரு வரியே சாட்சி.

'பங்சுவாலிடி' என்பது ஏதோ அலுவலக வேலைக்கு மட்டுமானதல்ல. குடும்பத்திலும், சமூகத்திலும் தினம் தினம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு செயல் தான். சரியான நேரத்துக்கு ஒரு மாத்திரை சாப்பிடுவது கூட இதன் ஒரு பாகம்தான்.

நேரம் தவறாமை ஒரு சின்ன விஷயம் போலத் தோற்றமளித்தாலும், பாறையைப் பிளக்கும் உளி போன்ற வலிமை அதற்குண்டு. நேரம் தவறாமல் இருக்கும் நபரை மற்றவர்கள் ரொம்பவே மதிப்பார்கள். தனது வாழ்க்கையை சரியாய் வாழத் தெரிந்தவரே நேரம் தவறாமையைக் கடைபிடிப்பார். அவர் நேர மேலாண்மையில் கில்லாடி என நிர்வாகம் அவரை கண்ணியத்துடன் கவனிக்கும்.

பிறரை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதன் முதல் அடையாளம் காலம் தவறாமை. ஒரு சந்திப்புக்காகவோ, வேலைக்காகவோ சரியான நேரத்தில் நீங்கள் ஆஜராகிறீர்களெனில் சந்திப்பில் கலந்து கொள்ளும் அனைவரையும் நீங்கள் மதிக்கிறீர்கள் என்பது அதன் வெளிப்படையான பொருள்.

உங்களுக்காக யாரும் காத்திருப்பதும் நல்லதல்ல, யாருடைய நேரத்தையும் நீங்கள் வீணடிப்பதும் நல்லதல்ல. காலம் தவறாமை சொல்லும் இன்னொரு விஷயம், 'நீங்கள் அந்த சந்திப்பை முக்கியத்துவம் வாய்ந்தது' என்று நினைக்கிறீர்கள் என்பதுதான்.

நேரம் தவறாமல் சரியான நேரத்தில் வரும் நபர் எப்போதுமே திறமைசாலியாகவும், தன்னம்பிக்கை உள்ளவராகவும் பரிமளிப்பார். அவருக்கு பெரிய பொறுப்புகள் வந்து சேரும்.

காலம் தவறாமை உங்களை நம்பிக்கைக்குரிய நபராய் அடையாளம் காட்டும். சொன்ன நேரத்தில் வருவது, சொன்ன நேரத்தில் வேலையை முடித்துக் கொடுப்பது, ஒப்புக் கொண்ட நேரத்தை மதிப்பது... இவையெல்லாம் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.

ஆகவே பணநியமன ஆணை கிடைத்தவுடன் துளியளவும் தாமதிக்காமல் பணியில் சேர்ந்து விடுங்கள்………..வாழ்த்துக்கள்