குடும்பத்தின் வழிகாட்டி முதியோர்: உலக முதியோர் தினம்

இன்றைய சூழலில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளில், குழந்தைகளை விட முதியோர் அதிகளவில் இருப்பர்.
அதே போல, வளரும் நாடுகளிலும் முதியோரின் எண்ணிக்கை இருமடங்காக உயரும் என ஐ.நா., மதிப்பிட்டுள்ளது. வயதான காலத்தில், இவர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்., 1ம் தேதி, சர்வதேச முதியோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள், முதியோர்களை மகிழ்விக்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இன்றைய விரைவான உலகில் குடும்ப உறவுகள் என்பது முன்பு இருந்ததை போல இல்லை. பெற்ற பிள்ளைகளால் கவனிக்கப்படமால் கைவிடப்பட்டு, பொருளாதாரத்தாலும் பாதிக்கப்பட்டு, அனாதைகளை போல வாழும் நிலைக்கு முதியோர் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களை பாதுகாக்க ஒவ்வொரு பிள்ளையும் முன்வர வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.

முதியோர் சுமையா

முதியோர் குழந்தைகளுக்கு சமம் என கூறுவார்கள். 50 வயதினை கடந்தவர்கள் முதியோராக கருதப்படுகின்றனர். உடல் மற்றும் மனதளவில் அவர்களின் செயல்பாடுகள் மாறிவிடும். முதியோர்களின் அறிவு மற்றும் வழிகாட்டி இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியமானது. அவர்களை சுமையாக கருதாமல், வரமாக கருதுங்கள். குடும்பத்தில் முதியோரை அரவணைத்து செல்லுங்கள்; நாமும் எதிர்காலத்தில் முதியோர் ஆவோம் என்பதை நினைவில் நிறுத்தி, அந்த சுயநலத்துக்காவது முதியோர்களை கவனிக்க முன்வர வேண்டும்.

குறையுமா முதியோர் இல்லம்

பிள்ளைகள் நல்ல வசதியோடு இருந்தும், பெற்றோர்களை தாங்களே பார்த்துக்கொள்ளாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமையும் நம் நாட்டில் தான் நடக்கிறது. யாருடைய பெற்றோராவது முதியோர் இல்லத்தில் இருந்தால், மீண்டும் வீட்டுக்கு அழைத்துவர இத்தினத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசும் முதியோருக்கு, பென்சன் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை வழங்க வேண்டும்.

Post a Comment

0 Comments