மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்து செல்கையில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர் உத்தரவு

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்துச் செல்கையில் பாதுகாப்பு விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குநர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றரிக்கை விவரம்: பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள், ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் சுற்றுலா சென்று திரும்புகின்றனர். அவ்வாறு, சுற்றுலா செல்கையில் ஏற்படும் பிரச்னைகளை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநரின் பாதுகாப்பு குறித்த அறிவுரைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

சுற்றுலா அழைத்துச் செல்வது என்பது மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாகவும், வகுப்புகளுகுரிய பாடப்பொருள் சார்ந்தாகவும் அமையுமாறு தலைமையாசிரியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். உடன் வரும் மாணவ, மாணவிகளின் விவரங்கள், பெற்றோர், அலைபேசி, மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தகவல் இருக்க வேண்டும். அதோடு, பாதுகாப்பு அடையாள அட்டையை ஒவ்வொருவரும் அணிந்திருக்கிறார்களா என்பதையும் ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், முக்கியமாக மாணவர்களுக்கு முதுநிலை ஆசிரியரும், மாணவிகளுக்கு முதுநிலை ஆசிரியை ஆகியோரும் பாதுகாப்புக்கு உடன் செல்ல வேண்டும்.

அணைக்கட்டுக்கள், மின்சக்தி நிலையங்கள், கடற்கரைகள் போன்ற இடங்களுக்குச் செல்லும் முன்பு ஆட்சியரிடமும், உரிய கல்வித்துறை அலுவலர்களிடம் அனுமதியும் பெற வேண்டும். சுற்றுலா செல்லும் போது அனைத்து விதிமுறைகளுக்கும் உள்பட்டு நடந்து கொள்வேன் என்றும், இதை உறுதி செய்யும் வகையில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆகியோரிடம் இருந்து மாணவர் அனுமதி கடிதம் முன்னதாகவே அளித்துள்ளனரா என்பதை தலைமையாசிரியர்கள் சரிபார்த்த பின்னர் பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இதைத் தொடர்ந்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் உடனே ஒவ்வொரு பள்ளிக்கும் சுற்றுலா தொடர்பாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தான தகவலை ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியர்களுக்கும் உடனே அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர் சுற்றரிக்கையில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments