தமிழகம் முழுவதும் போலீசில் காலியாக இருக்கும் பணியிடங்கள் 20 ஆயிரம்

தமிழக போலீசில், ஏ.டி.ஜி.பி., முதல் இரண்டாம் நிலை காவலர் வரை, 20 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, எஸ்.ஐ., மற்றும் போலீசார் தேர்வு நடக்காததால், காலியிடங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.

கட்டாயம் :

தேசிய அளவை விட, தமிழகத்தில், மக்கள் தொகை அடிப்படையிலான போலீசார் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இருந்தாலும், குற்றங்கள் எண்ணிக்கை அடிப்படையில், இதை இன்னும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த, ஜூலை நிலவரப்படி, டி.ஜி.பி., முதல், கடை நிலை போலீசார் வரை, 1,20,899 போலீசார் தமிழகத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 1,00,490 போலீசார் மட்டும் தற்போது பணியில் உள்ளனர்.ஏ.டி.ஜி.பி., முதல், போலீசார் வரை, 20,409 பணியிடங்கள் காலியாக உள்ளன.இவற்றில், அடிப்படையில் உள்ள, தலைமை காவலர், முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் சிறப்பு காவலர்கள் எண்ணிக்கை மட்டும், 15,998; எஸ்.ஐ., பணியிடங்கள், 4,047.

ஓய்வு:

ஆண்டு தோறும், தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஓய்வு பெறுவதால் பணியிடங்கள் காலியானாலும், அவற்றை, நிரப்பும் பணி என்பது, எப்போதாவது மட்டுமே நடக்கிறது.சில ஆண்டுகளுக்கு முன் தான், காலிப்பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, ஆயுதப்படை போலீசாருக்கு, பணி மூப்பு அடிப்படையில், அடுத்தடுத்த நிலைக்கு மாற்றப்பட்டனர்.கடந்த, 2012ல், இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்போர் என, 13,320 பேர், தேர்வு செய்யப்பட்டு, அவர்கள், தற்போது பணியில் இணைந்துள்ளனர்.

67 அறிவிப்புகள்:

கடந்த ஆண்டு, சட்டசபையில், காவல் துறை மானியக் கோரிக்கை முடிவில், 67 அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
அதில், 'இனி ஆண்டுதோறும், காவலர்கள், சிறை காவலர்கள், தீயணைப்பு பணியாளர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள் நிலையில், ஏற்படும் காலிப் பணியிடங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றை, ஒவ்வொரு ஆண்டும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என, அறிவித்தார்.அப்போதே, 1,091 எஸ்.ஐ.,க்கள், 1,005 தீயணைப்போர், 292, காவலர்கள், 17,138 பேர் என, 19,526 பேர் தேர்வு செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.இதன் படி, 2013 - 14ல், 13,294 இரண்டாம் நிலை காவலர்கள், 305 சிறைக் காவலர்கள், 905 தீயணைப்போர் மற்றும் 1,317 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப டிவெடுக்கப்பட்டது.

தேர்வு:

இதற்கான தேர்வுகளை நடத்த, சீருடை பணியாளர் தேர்வாணையம், அறிக்கை தயாரித்து, அரசிற்கு அனுப்பியது. ஆனால், இதுவரை ஒப்புதலோ, அதுகுறித்த அரசாணையோ வெளியாகாததால், பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, தேர்வாணய இணைய தளத்தில், 'இதுவரை, அரசிடம் இருந்து சாதகமான பதில் ஏதும், ஆணையத்திற்கு வரவில்லை. அரசாணைகள் கிடைக்கப்பட்ட பின், விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்; ஆணைகள் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.

எஸ்.ஐ., தேர்வில் கலந்து கொள்வதற்காக, காத்திருப்போர் கூறியதாவது:கடந்த, 2011ல், எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது, தாலுகா எஸ்.ஐ., அளவில், 4, 047 மற்றும் சிறப்பு காவல்படையில், 48 மற்றும் ஆயுதப்படையில், 153 காலியிடங்கள் உள்ளன.ஆண்டுதோறும் தேர்வு நடத்தியிருந்தால், காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கும். முதல்வர் தலையிட்டு, விரைவாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தவிர, டி.எஸ்.பி.,க்கள் நிலையில், 96; இன்ஸ்பெக்டர்கள் நிலையில், 22 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், டி.எஸ்.பி.,க்கள் பதவி உயர்வு மூலமும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய நேரடி நியமனம் மூலமும் நியமிக்கப்படுகின்றனர்.

Post a Comment

0 Comments