தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி அவர்களின் பிறந்ததினம் இன்று

பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை இங்கு விரிவாக காண்போம்.

பிறப்பு: செப்டம்பர் 17, 1879

இடம்: ஈரோடு, தமிழ்நாடு(இந்தியா)

இறப்பு: டிசம்பர் 24, 1973

பணி: அரசியல்வாதி, சமூக சேவகர்.

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு:

ஈ.வெ. ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற சகோதரிகளும் இருந்தனர். இவருடைய குடும்பம் வசதியான வணிக பின்னணியைக் கொண்டதாக இருந்தது.

ஆரம்ப வாழ்க்கை:

தனது படிப்பை ஐந்தாம் வகுப்புவரை முடித்துகொண்ட ஈ.வெ.ரா, அதன் பின் கல்வி பயில விருப்பம் இல்லாததால் தன்னுடைய 12 வது வயதில் தந்தையின் வணிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னுடைய இளம் வயதிலேயே, தனது பகுத்தறிவு சிந்தனையால், திராவிடத்தை சதியால் அடக்கியாண்ட ஆரியத்தை பல கேள்விகள் கேட்கத்தொடங்கினார். அவருடைய 19 வது வயதில்,13 வயது நிரம்பிய நாகம்மையாரை மணந்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நாகம்மையார் தன்னுடைய கணவரின் புரட்சிக்கு முழுவதுமாக தன்னை அற்பணித்துக்கொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகளில் ஒரு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது.1902 ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களைநடத்திவைத்தார். அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து விருந்துண்டார். இதனால் இவருக்கும், இவருடைய தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னர்,இவருடைய பகுத்தறிவு செயல்களை ஏற்கமுடியாத தந்தையின் கண்டனத்தால் துறவு பூண்டு காசிக்கு சென்றார்.

காசிக்கு பயணம்:

காசியில் அவருக்கு நடந்த நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகரசிந்தனைக்கு வித்திட்டது. பெரியாருக்கும் அவரது தந்தைக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் காசிக்கு சென்ற அவருக்கு, அங்கு பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் அன்னசத்திரத்தில் உணவு மறக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டார். இந்த நிலைமையை எண்ணி மிகவும் வருந்தினார். பின்னர் குப்பைத் தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவை உண்டு பசியாற்றினார். அதுமட்டுமல்லாமல், காசியில் வேசிகளின் வேசமும், திராவிடர்கள் பிச்சைகாரர்களாக இருப்பதையும் மற்றும் புனித கங்கையில் பிணங்கள் மிதப்பதையும் கண்ட அவர் அன்றிலிருந்து இறைமறுப்பாளராக(ஒரு நாத்திகவாதியாக) தன்னை மாற்றிக் கொண்டார்.

ஆரம்பகால அரசியல் வாழ்க்கை:

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட பெரியார்,1919 ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியதுமட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக்கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார். 1921 ஆம் ஆண்டுகள்ளுக்கடைகளை மூட வலியிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்,தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னைமரங்களை வெட்டிச்சாய்த்தார். இப்போராடத்தில்,கைது செய்யப்பட்டு சிறைதண்டனையும் பெற்றார்.1921-1922-ல் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மதுகுடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபாட்ட அவர், மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால்,இது இனவேற்றுமையை பிரதிபலிப்பதாக அமைவதால் அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பெரியார் 1925- ல் அக்கட்சியை விட்டு விலகினார்.

வைக்கம் போராட்டம்:

பெரியாருக்கு காந்தியின் கொள்கைகளில் ஒரு வலுவான நம்பிக்கை இருந்தது. கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும், ஈழவர்களும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் கோயிலுக்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 ஆம் ஆண்டு டி.கே. மாதவன் அவர்கள், இதை எதிர்த்து காந்திய வழியில் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார். இப்போராட்டதில், நாடெங்குமுள்ள காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தமிழகத்தின் சார்பாக தந்தை பெரியார் கலந்துகொண்டார் பின்னர்,கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். அவருடைய துணைவியான நாகம்மையாரும் இப்போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டபோதிலும், அவருடைய தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் வெற்றியும் கிட்டியது. இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என தமிழக மக்களால் அழைக்கப்பட்டார்.

சுயமரியாதை இயக்கம்:

1925 ஆம் ஆண்டு பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய கொள்கையே ‘மூடபழக்க வழக்கங்களை சமுகத்தில் மக்களிடம் இருந்து அகற்றுவதை’ நோக்கமாக கொண்டு செயல்பட்டது.தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைபிடிக்கும் பார்ப்பனியம், பெண்களை தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து குரல்கொடுத்தார். தென்னிந்தியாவில் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர் வாழ்வு சுரண்டப்படுவதையும், பெரியார் எதிர்த்தார். கைம்பெண் மறுமணம் போன்ற புரட்சி திருமணங்களை நடத்திக்காட்டியது மட்டுமல்லாமல் கலப்பு திருமணமுறையையும் இவ்வியக்கம் ஆதரித்தது. கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்தது.அரசு நிர்வாகப் பணி மற்றும் கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க இவ்வியக்கம் வலியுறுத்தியது. பின்னர், தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்புவதற்கு “குடியரசு நாளிதழை” 1925 ஆம் ஆண்டு தொடங்கினார். சுயமரியாதை இயக்கம், வெகுவேகமாக வளர்ந்தது மட்டுமல்லாமல், மக்களின் ஆதரவையும் பெற்றது. சுயமரியாதையாளர்கள் ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களிலும்,மாநாடுகளும், கூட்டங்களும் நடத்தப்பட்டு மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 1929 முதல் 1932 வரை மலேசியா, ரஷ்யா, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரிஸ், சிங்கப்பூர், இலங்கை, மேலும் பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிக்கூறினார்.

இந்தி எதிர்ப்பு:

1937 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றபிறகு ‘இந்தி’ கட்டாயமொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்தி பேசும் வடஇந்தியர்களிடமிருந்து தமிழர்களை பிரித்து இரண்டாம் தர குடிமக்களாக காட்டுவது மட்டுமல்லாமல், தமிழர்களின் முன்னேற்றத்தையும், பண்பாட்டையும் சிதைத்து விடும் என வலியுறுத்தி 1938- ல் நீதிக்கட்சியின் சார்பாக பெரியார் மற்றும் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரியாருடன் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட பெரியார் “நீதிக்கட்சியின்”(1916 ஆம் ஆண்டு பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற அரசியல் கட்சி பின்னாளில் நீதிக்கட்சியாக மாறியது) தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் நீதிக்கட்சி பெரும் வளர்ச்சிப்பெற்றது. இருப்பினும், நீதிக்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் செல்வந்தராகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருந்ததால், பெரியாரின் கீழ் செயல்பட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினார்.

பெரியாரின் திராவிட கழகம்:

பெரியார் அவர்கள், நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ல் ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது. திராவிடர் கழகம், சமுகத்தில் பரவிக் கிடந்த தீண்டாமையை ஒழிப்பதிலும், சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, இறைமறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண்கல்வி போன்றவற்றையும் வலியுறுத்திதொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகும்.‘கருப்பு சதுரத்தின் நடுவே சிவப்பு வட்டம்’ என்பதே திராவிட கழகத்தின் கொடியாக இருந்தது.

பெரியாருக்கும் அண்ணாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு:

பெரியாரின் திராவிட கழகம், சமுதாய மறுமலர்ச்சி, விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளை சார்ந்து இருந்ததால், திராவிட கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற பெரியார் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல்,‘திராவிடநாடு’ அல்லது ‘தனி தமிழ்நாடு’ என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். ஆனால் கா.ந. அண்ணாதுரை மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சியை பெறுவதில் அக்கறை காட்டினார். இதனால் இருவருக்குமிடைய கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திராவிட கழகத்தின் தொண்டர்களும், உறுப்பினர்களும் கழகத்திலிருந்து விலக சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தபொழுது, ஜூலை 9, 1948 ஆம் ஆண்டு பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டதை காரணம் காட்டி, அண்ணாதுரை தலைமையிலான திராவிட கழகத்திலிருந்து விலகினார். பின்னர் கா.ந. அண்ணாதுரை தனது வழிகாட்டியான பெரியாரிடமிருந்து பிரிந்து,1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

இறுதிகாலம்:

இந்து மத மூடநம்பிக்கைகளை அறவே எதிர்த்த பெரியார்,1952-ல் பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல்,1956 ஆம் ஆண்டு இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தி, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்,1962 –ல் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக கி. வீரமணியை நியமித்தார். மக்களுக்குள் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஓங்கி வளரவேண்டும் என்று கடைசிவரை போராடிய பெரியாரின் கடைசி கூட்டம் 1973 டிசம்பர் 19 ஆம் தேதி சென்னை தியாகராஜர் நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ‘சாதிமுறையையும், இழிவுநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்’ என்று முழக்கமிட்டு தன்னுடைய கடைசி உரையை முடித்துக்கொண்டார்.

புனைபெயர்கள்:

இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி ‘யுனஸ்கோ நிறுவனம்’ ஜூன் 27, 1973 ஆம் ஆண்டு பெரியாரை ‘புத்துலக தொலைநோக்காளர்’, ‘தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்’, ‘சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை’ என பாராட்டி விருது வழங்கியது. அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் ‘கடும் எதிரி’, ‘பகுத்தறிவு பகலவன்’, ‘வைக்கம் வீரர்’மற்றும் ‘தந்தை பெரியார்’ என பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறார்.

இறப்பு:

‘பகுத்தறிவின் சிற்பி’,‘அறிவு பூட்டின் திறவுகோல்’, எதையும் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று கேட்கவைத்தவர், மூட நம்பிக்கையை ஒழித்துத் தன்னம்பிக்கையை விதைத்தவர், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு தனது 94 வது வயதில் காலமானார்.

பலநூற்றாண்டு கால வரலாற்றை வெறும் இருபது வருடங்களில் நிகழ்த்திக்காட்டிய வரலாற்றுத் தேடல்; மனிதகுல வரலாற்றில் தன் மக்களின் விடியலுக்காகப் போராடிய மாபெரும் விரர்; இந்திய விடுதலையில் பங்காற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராயிருந்து, மதுவிலக்குக் கொள்கைகளை காந்திக்கு எடுத்துரைத்து, சுயமரியாதை இயக்கம் கட்டமைத்து, சீர்திருத்த திருமணம் என்ற ஒரு புதிய வாழ்க்கை ஒப்பந்த முறையை சட்டமாக்கி, தன் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வகைசெய்த பகுத்தறிவு பகலவன், திராவிடம் என்கிற பல நூற்றாண்டு கால வரலாற்றின் ‘வெற்றி நாயகன்’என இன்னும் சொல்லிக்கொண்டே போகக்கூடிய அரும்பணியை ஆற்றிய மாபெரும் சிந்தனையாளர் ‘பெரியார்’ என்றால் அது மிகையாகாது.


மேலும்  தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்...



விதண்டாவாதம் - தந்தை பெரியார்



தாழ்த்தப்பட்டோர்- தந்தை பெரியார் சிந்தனைகள் ( விடுதலை நாளிதழில் வந்த செய்தி)


தந்தை பெரியாரின் வாழ்க்கை மற்றும் சீர்திருத்த செயல்களை கால வரிசைப்படி அறிந்துகொள்ள இங்கே செல்லவும்...

Post a Comment

4 Comments

  1. காலை வணக்கம்
    நண்பர்களே
    இன்னும் 10 நாட்கள் தானே
    1 வருடம் பொருத்த நமக்கு
    இது கடினமல்ல்ல.
    கடுமையாக இறைவனிடம் வேண்டுவோம்,
    பொருத்ததார் பூமி ஆள்வார்.

    ReplyDelete
  2. எல்லாரும் ரெடியா இருங்கள் one, two, three சொன்னதும் யார் பர்ஸ்டா. ஸ்கூல் க்கு போரதுனு பார்ப்போம்
    ரெடி..........
    All the best to all selected candidates... you should appointed as teacher very soon.....

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..