66 கோடி அம்மாவின் கால் தூசுக்கு சமம்! நாஞ்சில் சம்பத்.

'இந்தியாவில் அரசியல் பதவிகளில் இருக்​கிற ஒவ்வொருவரும் அந்தந்த மாநிலங்களில் செல்வாக்குப் பெற்ற கட்சிகளோடு கைகோர்த்துக் கொண்டுதான் அந்த இடத்துக்கு வந்தார்கள்.
ஆனால், அ.தி.மு.க எந்தக் கட்சியினரின் தயவும் இல்லாமல் 37 இடங்களை வென்று தி.மு.க-வை தமிழகத்தைவிட்டு காலிசெய்தது. அம்மாவின் தயவால் எதிர்க் கட்சி அந்தஸ்தைப் பெற்ற தே.மு.தி.க-வுக்கு சமாதிகட்டி, அதிகாரத்திலிருந்த காங்கிரஸுக்கு 38 இடங்களில் டெபாசிட் இழக்கச் செய்து ஓர் இமாலய வெற்றியை இந்திய அரசியலில் அம்மா படைத்திருக்கிறார்கள்.

அவரை பிரதமர் என்று கழகத் தோழர்கள் ஆர்வத்தோடு அன்பின் காரணமாக சொன்னார்கள். அது ஒன்றும் பெரிய பாவம் இல்லை. பிரதமர் நாற்காலிகளை உற்பத்தி செய்யக்கூடிய உரிமையும் தகுதியும் உத்தரப்பிரதேசத்துக்குத்தான் உண்டு என்று கருதுகிற மனோபாவம் உள்ளவர்கள், தென்னகத்திலிருந்து இப்படி ஒரு குரலா என்று அதிர்ச்சி அடைந்தனர்.  இந்தக் குரல் அவர்களுக்கு அபசகுனமாகப்படுகிறது.

இதெல்லாம் அம்மாவின் வழக்கில் சதியாக சுழன்றுள்ளது.''- அ.தி.மு.க-வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தை சந்தித்தபோது இப்படித்தான் வெடித்தார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''பி.ஜே.பி-யைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, பெங்களூரு கோர்ட் தீர்ப்பை வரவேற்றுள்ளாரே?''
''பொது வாழ்க்கைக்குத் எந்தத் தகுதியும் இல்லாதவர் சுப்பிரமணியன் சுவாமி. அவருக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தார்கள்? 'இலங்கை சிறையிலிருக்கிற தமிழக மீனவர்களை விடுதலை செய்யுங்கள்; படகுகளைக் கொடுக்காதீர்கள் என்று நான்தான் ராஜபக்ஷேவிடம் சொன்னேன்’ என்கிற சுப்பிரமணியன் சுவாமிக்கு பி.ஜே.பி-யில் என்ன பொறுப்பு? அவர் என்ன பிரதம மந்திரியா? 'நான் மோடியிடம் பேசினேன். இந்த வழக்கிலே நீங்கள் எதாவது உதவப் போகிறீர்களா என்று கேட்டேன். சட்டத்தின்படி எல்லாம் நடக்கும் என்று அவர் சொன்னார்’ என்று சொல்ல இவர் யார்? அ.தி.மு.க அரசாங்கத்தை 356-வது பிரிவைப் பயன்படுத்தி கலைக்க வேண்டியது வரும் என்று எச்சரிக்கை விடுக்க இவருக்கு என்ன அருகதை இருக்கிறது? இவர் ஒரு காலத்தில் எம்.பி ஆனதே அம்மாவின் தயவால்தான் என்பதை மறந்துவிட்டார்.''

''வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்தது ஊர்ஜிதம் ஆகியுள்ளதாக நீதிபதி கூறியுள்ளாரே?''
''வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்தார் என்று 100 கோடி ரூபாய் அபராதம் என்று ஒரு காலாவதியாகிப் போன வழக்குக்குத் தீர்ப்பு வழங்கப்படுகிறது என்றால், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு மூன்று லட்சத்து 76 ஆயிரம் கோடி அபராதம் நாளைக்கு விதிக்கப்படுமா? 'கங்கா - கௌரி’ படப்பிடிப்புக்காக பெங்களூரு சென்றிருந்தபோது, அங்கே கர்நாடகத்தைச் சேர்ந்த காலிகள் அம்மாவை முற்றுகையிட்டு 'காவிரி தண்ணீர் பிரச்னையில் தமிழகம் எங்களை வஞ்சிக்கிறது. இங்கே படப்பிடிப்பு நடத்தக் கூடாது; வெளியேறுங்கள். கன்னடம் வாழ்க என்று சொல்லுங்கள்’ என  முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள்.  'என் உயிர் போனாலும் போகுமே தவிர, என் வாயிலிருந்து தமிழ் ஒழிக என்று ஒரு வார்த்தைகூட வராது; கன்னடம் வாழ்க என்று சொல்ல மாட்டேன்’ என்று அந்த இடத்திலேயே ஓங்கி முழங்கியவர் அம்மா.''

''66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு என்பது?''
''66 கோடி ரூபாய் அம்மாவின் கால் தூசுக்கு சமம். அந்த நாட்களிலேயே பல கோடி​களைத் தாண்டி தன் கொடிகளைப் பறக்கவிட்டவர். வேதனை​களைச் சுமந்துகொண்டு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் எங்கள் தாய்... அசோக வனத்தில் அடைப்பட்டிருந்த சீதா பிராட்டி மீண்டும் வந்ததுபோல் விலங்குகளை உடைத்துக்கொண்டு வெளியே வருகிற நாள் வெகு தொலைவில் இல்லை.

எதிர்க் கட்சித் தலைவராக இயங்கவே முடியாமல் முடங்கிக் கிடந்த விஜயகாந்த், இப்போது கவர்னரைப் போய் சந்தித்து சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டது என்று புலம்புகிறார். பேத்தி கல்யாணம் மூலம் தனக்கு அரசியலில் மறுவாழ்வு கிட்டுமா, மகனுக்கு மகுடம் கிடைக்குமா என்று மனப்பால் குடிக்கும் டாக்டர் ராமதாஸ் ஒப்பாரி வைக்கிறார். நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று தமிழிசை தவில் வாசிக்கிறார். இந்தத் தரங்கெட்ட அரசியலைப் பார்த்து தமிழகம் சிரிக்கிறது.''

Post a Comment

0 Comments