வாட்ஸ்
அப் செயலி தொடர்ந்து தன்
பயனாளர்களுக்கான வசதிகளை அதிகப்படுத்திக் கொண்டே
செல்வதால், அதன் பயனாளர்கள் எண்ணிக்கையும்
அதிகரித்து வருகிறது. டெக்ஸ்ட் அனுப்புவது, இலவசமாக அழைப்புகளை மேற்கொள்வது
போன்ற புதிய வசதிகள், பலரை
இதன் பக்கம் திரும்ப வைத்துள்ளது.
இறுதியாகத் தெரிந்த வரை, 80 கோடி
பேர் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி
வருகின்றனர்.
இவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், வாட்ஸ் அப் தரும் சில வசதிகள் உங்களுக்குப் புலப்படாததாக இருக்கலாம். அல்லது அவற்றை எப்படி சமாளித்துப் பயன்படுத்துவது என்பதில் உங்களுக்குப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். இவை அனைத்தையும் நாம் சரி செய்துவிடலாம் என்பதே நமக்குக் கிடைத்திருக்கும் ஆறுதலான தகவல். எங்கு சென்று எதனைச் சரி செய்திடலாம் என்று அறிந்து கொண்டால், வாட்ஸ் அப் உங்கள் தொண்டனாக மாறிவிடும். அதன் மூலம் உங்கள் நட்பு வட்டம் வளரும். அதற்கான குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன.
உங்கள் மெசேஜ் படிக்கப்பட்டதா?
நீங்கள் வாட்ஸ் அப்பில் நண்பருக்கு அனுப்பிய மெசேஜ் படிக்கப்பட்டதனை, சேட் விண்டோவில் உங்கள் செய்தி அருகே இருக்கும் இரண்டு டிக் அடையாளங்கள் நீல நிறத்திற்கு மாறியதை வைத்து அறிந்து கொள்ளலாம். இது குறித்து மேலும் சில தகவல்களை அறிய நீங்கள் விரும்பலாம். உங்கள் செய்தியில் டேப் செய்து, அப்படியே அழுத்தியபடி வைத்திருக்கவும். பின்னர், Info ஐகானைத் தட்டவும். இப்போது சரியாக எந்த நேரத்தில் உங்கள் மெசேஜ் படிக்கப்பட்டது என்பது காட்டப்படும். ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திலும், மெசேஜ் டேப் செய்து, இழுத்து இடது பக்கம் விட்டால், இந்த தகவல்கள் காட்டப்படும்.
போன் மாற்றினாலும், அரட்டை செய்தி அப்படியே இருக்கும்
நீங்கள் புதிய ஐபோன் அல்லது ஆண்ட்ராய்ட் போன் வாங்கியிருக்கலாம். தகவல்களை புதிய போனுக்கு மாற்றுகையில், வாட்ஸ் அப் மெசஞ்சரில் உள்ள சேட் ஹிஸ்டரி (chat history) யையும் மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் மைக்ரோ எஸ்.டி. கார்ட் பயன்படுத்துபவராக இருந்தால், இது இன்னும் எளிதானது. Menu > Settings > Chat settings > Backup conversations என்று சென்று இவற்றைப் பதிவு செய்து கொள்ளலாம். புதிய போனுக்குக் கார்டை மாற்றி, வாட்ஸ் அப் இன்ஸ்டால் செய்திடவும். Restore என்று கேட்கையில், சரி என்று கொடுத்தால், அப்படியே பழைய போன் பயன்படுத்தும்போது இருந்த அனைத்து தகவல்களும் கிடைக்கும். பேக் அப் செய்வது, போனுக்குள்ளாகவே இருந்தால், பைல் எக்ஸ்புளோரர் பயன்படுத்தி sdcard/WhatsApp/ folder எனச் சென்று, நீங்களாகவே தகவல்களை மாற்றிக் கொள்ளலாம். விரைவில் கூகுள் ட்ரைவ் மூலம் இந்த தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதி வாட்ஸ் அப் செயலிக்குத் தரப்படவுள்ளது.
மொத்தமாக தகவல்களை அனுப்ப
மொத்தமாகச் சிலருக்கு ஒரு குறிபிட்ட தகவலை அனுப்ப நீங்கள் திட்டமிடலாம். அதன் மூலம் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம். ஆனால், அதே நேரத்தில், அது மொத்தமாக அனுப்பப்பட்ட தகவல் என அதனைப் பெறுபவர்களுக்குத் தெரியக் கூடாது. இதற்கு வாட்ஸ் அப்பில் தரப்பட்டுள்ள broadcast என்னும் வசதி உதவுகிறது. ஒரே செய்தியைப் பலருக்கு அனுப்பலாம். ஆனால், பெறும் ஒவ்வொருவரும், அது உங்கள் இருவருக்கு மட்டுமே பகிர்ந்து கொண்ட செய்தி என எண்ணுவார்கள். ஆண்ட்ராய்ட் போனில், Menu வில் டேப் செய்திடவும். பின்னர் ‘New Broadcast’ என்பதில் அழுத்தி இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில், Chats திரையில், Broadcast Lists என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், ‘New List’ என்பதில் டேப் செய்திடவும். உங்கள் தகவலைப் பெறுபவர், உங்களுக்குப் பதில் அளித்தால், அது உங்களுக்கு மட்டுமே கிடைக்கும். தகவல் அனுப்பப்பட்ட மற்றவர்களுக்குச் செல்லாது.
அழிக்கப்பட்டவற்றை மீண்டும் பெறலாம்
வாட்ஸ் அப் செயலி, ஒவ்வொரு காலை 4 மணி நேரத்தில், மெசேஜ் அனைத்தையும் பேக் அப் செய்கிறது. எனவே, அண்மையில் நீங்கள் அழித்த, நீக்கிய மெசேஜை மீண்டும் பெற வேண்டும் என எண்ணினால், வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்து, பின் மீண்டும் இன்ஸ்டால் செய்திடவும். இந்த செயல்பாட்டினை மேற்கொள்கையில், பேக் அப் செய்தவற்றிலிருந்து தகவல்களை மீண்டும் கொண்டு வரவா? என்று கேட்கும். சென்ற ஏழு நாட்களில் பரிமாறிக் கொள்ளப்பட்ட மெசேஜ்கள் அனைத்தும் கிடைக்கும். இதற்கு ES File Explorer போன்ற செயலிகளைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் sdcard/WhatsApp/Databases எனச் சென்றால், பேக் அப் செய்யப்பட்ட செய்திகளைப் பார்க்கலாம். இது ஆண்ட்ராய்ட் போன்களில் மட்டுமே செயல்படுகிறது.
டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப்
உங்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் அல்லது லேப் டாப் கம்ப்யூட்டரில், குரோம் பிரவுசர் இன்ஸ்டால் செய்திருந்தால், WhatsApp Web சென்று அதில் காட்டப்படும் செயல்பாடுகளைப் பின்பற்றவும். இந்த நேரத்தில், உங்கள் போனும் இணையத் தொடர்பில் இருக்க வேண்டும். இரண்டும் வை பி இணைப்பில் இருந்தால் நல்லது. ஏனென்றால், இந்த வெப் அப்ளிகேஷன், உங்கள் போனில் இருந்து அனைத்தையும் ஒருங்கிணைக்கும். வாட்ஸ் அப் திறந்து, அதன் மெனுவில் WhatsApp Web இருப்பதைக் காணலாம். பிரவுசரில் காட்டப்படும் QR குறியீட்டினை ஸ்கேன் செய்திடவும். இப்போது, கம்ப்யூட்டரில், நீங்கள் வாட்ஸ் அப் அரட்டையைத் தொடரலாம். அறிவிப்புகளையும் கம்ப்யூட்டரிலேயே பெறலாம். இந்த செயல்பாடு, ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் இல்லை.
வாட்ஸ் அப் படங்கள் போனில் வேண்டாமே
வாட்ஸ் அப் வழி வரும் படங்கள் பலருக்கு எரிச்சல் ஊட்டுவதாக இருக்கும். இவை தங்கள் ஆண்ட்ராய்ட் போனில், காலரியில் இடம் பெறக் கூடாது என எண்ணலாம். அல்லது ஐ போனில் கேமரா ரோலில் இருக்கக் கூடாது என எண்ணலாம். ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில், Settings > Privacy > Photos என்று சென்று WhatsApp off இயக்கிஇதனைச் செயல்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் போனில், ES File Explorer போன்ற பைல் மேனேஜர் செயலியை இயக்கவும். அதில் sdcard/WhatsApp/Media எனச் செல்லவும். தொடர்ந்து, பகிர்ந்து கொள்ள விரும்பாத எந்த போல்டரிலும் இடது கீழாக New என்பதில் டேப் செய்திடவும். அங்கு .nomedia என்ற பைலை உருவாக்கவும். உங்கள் வாட்ஸ் அப் இமேஜஸ் எதுவும் காலரியில் எழுந்து வராது.
தகவல் அரட்டைக்கு ஒரு ஷார்ட் கட்
நீங்கள் மேற்கொள்ளும் தகவல் அரட்டைகளுக்கு ஒரு ஷார்ட் கட் அமைக்க விரும்புகிறீர்களா? குறிப்பிட்ட அரட்டை தகவலை டேப் செய்து, அழுத்தவும். பின்னர், கிடைக்கும் பாப் அப் மெனுவில் Add conversation shortcut என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உங்களுடைய ஹோம் ஸ்கிரீனில் ஓரிடத்தில் இது இடம் பெறும். இதனை அழுத்திப் பிடித்து, ஓர் அப்ளிகேஷனைப் போல, ஒரு விட்ஜெட் போல எங்கு வேண்டுமானாலும் இழுத்து வைக்கலாம்.
குழு அரட்டைகளை நிறுத்த
சில வேளைகளில், குழு தகவல் அரட்டைகள் அதிகம் ஏற்பட்டு நமக்கு எரிச்சலைத் தரும். அந்த உரையாடலில் இருந்து வெளியே செல்ல நீங்கள் விரும்பாமல் இருக்கலாம். ஆனால், அதற்காக, அந்தக் குழுவில் ஒருவர் செய்தி அனுப்பும்போதெல்லாம், உங்களுக்கு ஓர் அறிவிப்பு கிடைப்பதனை விரும்ப மாட்டீர்கள். இதனைத் தவிர்க்க, உங்கள் ஐபோனில், group chat திறக்கவும். குரூப் பற்றிய தகவல் அறிய, subjectல் டேப் செய்திடவும். இப்போது Group Info ஸ்கிரீன் கிடைக்கும். இங்கு Mute என்ற டேப்பினை அழுத்திவிட்டால், உங்களுக்கான அறிவிப்புகள் வராது. ஆண்ட்ராய்ட் போனில், chat திறந்து, Menu பட்டன் அழுத்தவும். பின்னர், Mute என்பதனை அழுத்தவும். இதனைக் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் செயல்படும்படியும் அமைக்கலாம். அல்லது Show notifications என்ற பெட்டியில் உள்ள டிக் அடையாளத்தை நீக்கிவிட்டால், நிரந்தரமாக எந்த அறிவிப்பும் உங்களுக்கு கிடைக்காது.
வாட்ஸ் அப் செயலியைப் பூட்டுக
வாட்ஸ் அப் செயலியை வேறு யாரும் பார்க்க இயலா வண்ணம் பூட்டி வைக்கலாம். இதனை ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில் மேற்கொள்ள இயலாது. ஆண்ட்ராய்ட் போனில், இதற்கு பல வழிகள் உள்ளன. பல வகையான பூட்டுகளைத் தரும் அப்ளிகேஷன் மூலம், பாஸ்வேர்ட் அல்லது ‘பின் எண்’ கொடுத்துப் பிறர் நம் தகவல் அரட்டையைப் பார்க்காத வகையில் பூட்டி வைக்கலாம். Chat Block, AppLock, or Smart AppLock போன்ற செயலிகள் இதற்கு உதவும். இந்த அப்ளிகேஷன்களில், நீங்கள் அறியாமல் தவறான பாஸ்வேர்ட் அல்லது பின் பயன்படுத்தித் திறந்து பார்க்க விரும்புபவர்களைப் போட்டோ எடுத்து உங்களிடம் காட்டும் வசதியும் உள்ளது. உங்கள் அரட்டை தகவல்களைத் திருட முயன்ற உங்கள் அன்பு “நண்பர்களை” நீங்கள் ஒரு பிடி பிடிக்கலாம். விண்டோஸ் போனில், WhatsApp Locker என்ற செயலியைப் பயன்படுத்தலாம். பிளாக் பெரி போனில் Lock for Whats Messenger என்ற செயலி உதவும்.
இறுதியாகப் பார்த்த நேரம் மறைக்க
வாட்ஸ் அப் செயலியில், ஒரு தொடர்பினைப் பார்க்கையில், வழக்கமாக எப்போது இறுதியாக அரட்டையில் இருந்தோம் என, அவரின் பெயருக்குக் கீழாகக் காட்டப்படும். இதன் மூலம், அவர் எப்போது வாட்ஸ் அப் பயன்படுத்தினார் என்று நாம் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் இவ்வாறு வாட்ஸ் அப் செயலியைப் பார்த்ததை மற்றவர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்று எண்ணினால், அதற்கான அமைப்பினை உருவாக்கலாம். Settings > Account > Privacy எனச் சென்று, இந்த செட்டிங்ஸ் அமைக்கலாம். ஆனால், ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்களும் அதே போல அடுத்தவர்கள், வாட்ஸ் அப் செயலியை எப்போது பயன்படுத்தினார்கள் என்று பார்க்க முடியாது.
0 Comments
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..