கல்வியின் தரம்

சோவியத் ரஷ்யா உலகப் படத்தில் தோன்றுவதற்கு முன் ஒரு நிகழ்ச்சி. சார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியில் மக்கள் திணறிக் கொண்டுருந்தனர். கலகங்கள் ஆங்காங்கு வெடித்தன. அவற்றைக் கட்டுக்குள் கொண்டு வர இயலா மன்னன் சமரச பேச்சுக்காக மக்களைக் கூட்டினான்.


"ஏன் இப்படி கலகம் செய்கிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும?"
"
வளமான வாழ்க்கை "
"
அப்படி என்றால்? குறிப்பிட்டுச் சொல்லுங்கள் "
"
நாங்கள் வரி செலுத்த மாட்டோம் "
"
சரி. அப்புறம்?"
"
எங்களுக்கு இலவச மருத்துவ வசதி வேண்டும் "
"
அப்படியே செய்கிறேன். வேறு உண்டா?"
'
எங்கள் குழந்தைகளுக்கு கல்வி வேண்டும்"
மன்னன் சிந்தித்தான். கல்வியைக் கொடுத்தால் இவர்களின் சிந்தனை வளரும். வாழ்வில் வளம் பெருகும். சுதந்திர உணர்வு தோன்றும். அவனது ஆட்சிக்கு முடிவு வந்துவிடும். எனவே கல்வியைக் கொடுக்க மறுத்து விட்டான்.
இதுதான் கல்வியின் சிறப்பு. எல்லா வளங்களுக்கும் வழி வகுக்கும் கல்வி இன்று நம்மிடையே எந்நிலையில் இருக்கிறது? எந்த நோக்கத்திற்காக கல்விக் கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டனவோ, அது நிறைவேறி விட்டதா? கடையனுக்கும் கல்வி போய் சேர வேண்டும் என்று காமராஜ் கனவு கண்டார். அது நனவாகி விட்டதா? "கல்வியில் சிறந்த தமிழ்நாடு, புகழ் கம்பன் பிறந்த தமிழ் நாடு"- என்று பாரதியால் பாடப்பட்ட தமிழ்நாட்டில் கல்வியின் தரம் இன்று எப்படி இருக்கிறது?
ஒரு ஆரம்பப்பள்ளியின் முதல் வகுப்பு பச்சிளங் குழந்தைகளின் தோற்றத்திலே ஒரு இனிமை. அவர்களில் ஒரு துடிப்பு - கண்களிலே ஒளிக்கீற்று -

"
நீ எதற்காகப் பள்ளிக்கு வருகிறாய் ?" - ஆசிரியை ஒவ்வொரு பிள்ளையிடம் கேட்கிறார்
"
நான் டாக்டராக வேண்டும்"
"
நான் என்ஜினியராக வேண்டும்"
"
நான் கலெக்டராக வேண்டும்"
இதே மாணவர்கள் பனிரெண்டாவது வகுப்புக்கு வரும் போது, இதே கேள்வியைக் கேட்டுப் பாருங்கள்! "ஏதோ படிக்கிறேன் சார்! என்ன செய்வதென்றே புரியவில்லை. இந்த பதில் தான் வருகிறது. துடிப்போடும் தீர்மானத்துடனும் பள்ளியில் அடியெடுத்து வைத்த மாணவனை பனிரெண்டு ஆண்டுக் கல்வி படாத பாடு படுத்திக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தக் கல்வியைத் தானே நாம் இன்று இளைய தலைமுறைக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
கல் + வி = கல்வி. கல் என்றால் தோண்டு என்று பொருள். ஒரு மாணவனின் உள்ளத்தைத் தோண்டி அங்கே மறைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிக் கொணர்வதே கல்வியின் நோக்கம். ஆனால் இன்று நடப்பது என்ன? அவனது ஆற்றல்களைத் தோண்டி பாராமல் அப்படியே மண்மூடி புதைத்து விடுகிறோம். அவன் தேர்வில் வெற்றி பெற வேண்டும். ஒரு பட்டத்தைப் பெற வேண்டும். அதன்மூலம் ஒரு வேலேயைப் பெற வேண்டும். இதுவே கல்வியின் முழுமுதற் பயனாகக் கருதப்படுகிறது. கல்வியின் பயனே தவறாகக் கொள்ளப்படும் போதுஅதன் நோக்கமே திசை திருப்பப்படும் போதுஅக்கல்வியின் தரத்தை எங்கே காண்பது?

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுவதும் விளையாட்டுஎன்று
வழக்கப்படுத்திக் கொள்ளுப் பாப்பா - என்றார் 
பாரதியார். ஆனால் இன்று ஒரு சில சதுர அடிகளுக்குள் ஓராயிரம் பச்சிளக்குழந்தைகளை செங்கற்களைப் போல அடுக்கி வைத்து, ஒரு சில ஆங்கிலப் பாடல்களைப் பாராமல் சொல்லிக் கொடுக்கிறோம். கழுத்துப்பட்டையுடன் கூடிய சீருடையின் இறுக்கத்திலும், காலணயின் நெருக்கத்திலும், வகுப்பறையின் புழுக்கத்திலும் இந்த மொட்டுகள் படும் வேதனைஅப்பப்பா……… சொல்லிமாளாது. இன்று பள்ளிகளில் விளையாட்டுத்திடல் இல்லை. விளையாட்டு இல்லை. பாட்டு இல்லை. பரதம் இல்லை. ஓவியம் இல்லை. உயர்வுதரும் படைப்பாற்றல் இல்லை. பெற்றோரும், ஆசிரியரும், இந்த சமுதாயமும் இதைப் பெருங்குறையாக கருதவில்லை. இவர்களுக்குத் தேவை. படிப்பு, படிப்பு, எப்பொழுதும் படிப்புநூறு சதவீத்தேர்ச்சி, நூற்றுக்கு நூறு மதிப்பெண். இதுவே பெரிதாக கருதப்படுகிறது. தேர்வு அரக்கனைச் சிந்தித்து அவனைத் திருப்தி படுத்துவதே கல்வியின் நோக்கமாகக் கருதப்படுகிறது.
இன்றைய தேர்வு முறையின் நிலை என்ன? மாணவனின் நினைவாற்றலை மட்டுமே அது சோதிக்கிறது. பாடப் புத்தகத்தில் உள்ளதை வரி விடாமல் எவன் எழுதுகிறானோ, அவனே உயர்ந்த மதிப்பெண் பெறுகிறான். அவனது சிந்தனை ஆற்றலை வளர்த்தோமா? புதியென கண்டு பிடிக்கும் ஆற்றலை வளர்த்தோமா? இல்லையே! கார்ல் மார்க்ஸின் பொருளாதாரச் சித்தாந்தம் என்ன? மாணவன் அருமையாகப் பதில் எழுதுகிறான். பரிணாமத்தைப் பற்றி டார்வின் என்ன கூறினார்? மிகத் தெளிவாக மாணவன் பதில் உரைக்கிறான். இவைகளைப்பற்றி நீ என்ன கூறுகிறாய் என்று கேளுங்கள். அவன் திணறுகிறான். மனப்பாட ஆற்றலை வளர்த்த அளவுக்கு சிந்தனை ஆற்றலை வளர்க்கத் தவறிவிட்டோமே!
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒப்புமைத் தத்துவத்தைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதத் தெரிந்த ஒரு எம்.எஸ்ஸி மாணவனுக்கு, மை நிரப்பும் கருவி (இங்க் பில்லர்) எப்படி வேலை செய்கிறது எனப் புரியவில்லை. ஜேம்ஸ் பதில் எழுதி ஐந்துக்கு ஐந்து மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு, பானையில் நீர் கொதிக்கும் போது அலுமினிய மூடி ஏன் நடன மாடுகிறது என்று தெரிவதில்லை. ஏன் இந்த அவநிலை? சிந்தனை ஆற்றல் வளரவில்லை. புதியென கண்டுபிடிக்கும் ஆர்வம் இல்லை. சொன்னதையே திருப்பிச் சொல்லும் கிளிப் பிள்ளை மாணவர்களைத் தான் உருவாக்கினோமே தவிர புதிய சிந்தனைகளைக் கொண்ட மாணவர்களை உருவாக்க தவறிவிட்டோம். எனவே தான் சி.வி.இராமனுக்குப் பிறகு யாரும் இங்கு நோபல் பரிசு பெற வில்லையோ? சிந்திக்க வேண்டியது நமது கடமை.
ஒரு கருத்தைக் கசடறக் கற்று, கற்ற வழி நிற்பதற்காக ஒரு மாணவன் பாடப் புத்தகங்களை மட்டுமன்று பல புத்தகங்களையும் படிக்க வேண்டும். பல அறிஞர்களோடு உரையாட வேண்டும். பல கருத்தரங்குகளில் கலந்து கொள்ள வேண்டும். இவற்றிலிருந்து ஒரு புதிய கருத்தை உருவாக்க வேண்டும். ஒரு சொட்டுத் தேனுக்காக ஓராயிரம் பூக்களின் கதவைத் தட்டும் தேனீயைப் போல, ஒரு புதிய கருத்தை உருவாக்க அவன் உழைக்க வேண்டும். இது அல்லவா கல்வி! பள்ளியிலும் கல்லூரியிலும் கற்பிக்கப்படுபவை கல்வியே அல்ல . கல்வியை அடையும் வழிகள் என்ற எமர்சனின் கூற்றை இவன் உணர வேண்டும். (The things taught in schools and colleges are not education but the means of education.) "நீங்கள் ஐந்தே ஐந்து கருத்துகளை நன்றாகக் கிரகித்து அவற்றை உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பீர்களானால், ஒரு பெரிய நூல் நிலையம் முழுவதும் மனப்பாடம் செய்தவனை விட கல்விமான் ஆவிர்கள். வெறும் விஷயங்களைச் சேகரிப்பது தான் கல்வி என்றால், நூல் நிலையங்களன்றோ மகான்களாகக் கருதப்படும்" என்ற விவேகானந்தரின் கூற்று எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.
இன்றைய தேர்வு முறை தீமை நிறைந்தது. மாணவனின் திறமையை அளக்க இந்த முறையைத் தவிர வேறு வழி இல்லாததால், அதைக் கட்டி மாரடிக்கறோம். பிள்ளையில்லா வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுகிறான். இதனால் பல தவறுகள் ஏற்படுகின்றன. கல்லூரியில் ஒரு பாடத்தில் தேர்வு என வைத்துக் கொள்ளுவோம் - மூன்று மணிநேரம், ஏழு கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். அதில் ஐந்து கேள்விகளுக்கு விடை எழுத வேண்டும். தேர்வுக்கு முன் ஒரு மாணவன் மொத்தம் ஏழு கேள்விகளிலே படித்திருந்தான். அந்த ஏழு கேள்விகளும் வந்துவிட்டன. அருமையாக எழுதினான். அவன் மாநிலத்திலேயே முதல்மாணவன். இன்னொரு மாணவனோ அந்த ஏழு கேள்விகளைத் தவிர, மற்ற எல்லா பாடங்களையும் படித்திருந்தான். அவனுக்கோ அதிர்ச்சி தோல்வி! உழைத்தவன் தண்டிக்கப்படுகிறான். ஊதாரியோ பாராட்டப்படுகிறான். இது என்ன தேர்வு!
மற்றுமோர் எடுத்துக்காட்டு. நூற்றுக்கு முப்பத்தைந்து மதிப்பெண் எடுத்தால் ஒரு மாணவன் தேர்ச்சி பெற்றவனாகக் கருதப்படுகிறான். இதன் பொருள் என்ன? நூறு கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். இதில் முப்பத்தைந்து கேள்விகளுக்குப் பதில் தெரிந்தால் போதும், தேர்ச்சி. அப்படியென்றால் அறுபத்தைந்து கேள்விகளுக்குக் பதில் தெரியாது என்று தானே பொருள். இது என்ன தேர்வு!
பாடம் நடத்தப்படுவதோ ஒரு வருடம். அந்த ஒரு வருடப் பாடத்தில் மாணவன் தேர்வு எழுதுவதோ மூன்று மணி நேரம். மூன்று மணி நேரம் தேர்வு எழுதியதை ஆசிரியர் மதிப்பீடு செய்வதோ மூன்று நிமிடம். இது என்ன தேர்வுஇதை விட திருவுளச் சீட்டுப் போட்டுக் குலுக்கல் முறையில் யார் யார் தேர்ச்சிப் பெற்றுள்ளார்கள் எனத் தீர்மானிக்கலாமே!
இன்றையக் கல்வி முறையில் பாடத் திட்டங்கள் அதிகம். அதைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரின் வேலைப் பளு அதிகம். அதைப் படிக்கும் மாணவனின் புத்தகச் சுமையோ மிக அதிகம். ஆனால் ஏற்படும் பயனோ மிகக் குறை. கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் உழைப்பெல்லாம் விரலுக்கு இறைத்த நீராகி விடுகிறது
சுதந்திரம் பெற்ற பின் நமது கல்வி முறையில் எத்தனையோ சீர்திருத்தங்கள் வந்தன. கமிஷன்கள் ஏற்படுத்தப்பட்டன. உலக வரிசையில் வைத்துப் போற்றத் தகுந்த சிறந்த கல்வியாளரான தாகூர், காந்தி, டாக்டர் முதலியோர், மால்கம் ஆதிசேஷையோ, விஸ்பேஸ்ர ஐயர், ஆகியோரின் கருத்துகள் எல்லாம் ஆராயப்பட்டன. இந்த வற்றாத ஜீவநதிக் கருத்துக்களெல்லாம் தேர்வென்ற மணற் பரப்பில் பாய்ந்து பயனற்றுப் போயின. வந்த சீர்திருத்தங்கள் கல்வியின் வெளிப் புறத்தோற்றத்தில் தான் மாற்றங்களை ஏற்படுத்தின. தரத்தில் மாற்றம் இல்லை. அதே கருப்பன் இன்றும் தொடருகிறான். அவன் அணிந்திருந்த சட்டையில் தான் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதே தவிர அவனது அறிவு வளர்ச்சியிலும், மன வளர்ச்சியிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இன்றைய கல்வி முறையில் மாற்றம் தேவை. என்று எல்லோரும் சொல்லுகிறோம். தேர்வு முறையால் பயனில்லை என்று எல்லோரும் ஒத்துக் கொள்ளுகிறோம். ஆனால் அதைச் செய்வதற்கு நம்மிடம் துணிவில்லை. என்ன ஆகுமோ என்ற பயம். இதுவரை பழகிப் போன பாதையில் இருந்து சற்று விலகிச் செல்ல அச்சம். இந்த அச்சத்தை உடைத்து புதிய பாதையைக் காண வேண்டும். இதைச் செய்யமால் காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பது நாம் இளைய தலைமுறைக்கு நாம் செய்யும் துரோகமாகும். நமது இளைய தலைமுறைக்கு மிகச்சிறந்த கல்வியைக் கொடுப்பதை விட, வேறு சிறந்த கொடையை நம் நாட்டிற்கு அளிக்க முடியாது. what greater or better gift can we offer the republic thow to teach and instruct our youth? - சிசரோ.



Post a Comment

0 Comments