அரசு பள்ளி மாணவர்கள், இரண்டாம் தர குடிமக்களா?

டாக்டர் எம்.மீனாட்சிசுந்தரம், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: அரசு பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் வேலை செய்பவர்களும் கூட, தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை. ஆனால், இதே பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு டாக்டர், இன்ஜினியர் போன்ற தொழில் கல்விக்கு சேர்த்துவிடும்போது மட்டும், அரசு கல்லூரிகளையே நாடுகின்றனர்.


அதே போல், வேலை வாய்ப்பை பெற முயற்சிக்கும் போதும், அரசு வேலையையே விரும்பி தேர்வு செய்கின்றனர்.ஒரு நேரத்தில் கசந்த அரசு சேவை, இன்னொரு நேரத்தில் இனிக்கக் காரணம் என்ன?ஆனால், வசதி வாய்ப்பற்ற பெற்றோரோ, தங்கள் குழந்தைகளின் கல்விக்கு அரசு பள்ளிகளையே நம்பி படிக்க வைக்கின்றனர்.

அரசு பள்ளிகளில் நிலவும் எல்லா கஷ்ட நஷ்டங்களையும் அனுபவித்து படித்து, அதிலும் வெற்றி பெறுகின்றனர். கல்லூரி வாழ்வில் அடி எடுத்து வைக்கும் போதும், வேலை வாய்ப்பை எதிர் கொள்ளும் போதும், இந்த அடித்தட்டு மக்களின் குழந்தைகள் போட்டி போடுவது, யாருடன் தெரியுமா? இதுவரை அரசு சேவையை ஒதுக்கி இருந்த, மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த மாணவர்களுடன் தான்!

இந்த நிலை, சமூக நீதிக்கு புறம்பானது. எனவே, கல்லூரி படிப்புகளிலும், அரசு வேலை வாய்ப்புகளிலும், அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு குறைந்தது, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். அப்போது தான், அரசு பள்ளிகளில் படிக்க வைக்க, போட்டி வரும். அப்படி ஒரு நிலை வந்தால், அரசு பள்ளிகளின் தரம் குறைவது பற்றி அனைவரும் கவலைப்பட்டு, அதை மேம்படுத்த முற்படுவர்.

கடந்த, 1967க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த திராவிட கட்சி ஆட்சிகளின் கபட நாடகத்தால், தற்போது தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மட்டும், இந்தி மொழி பயிற்றுவிக்கப் படுவதில்லை. ஆனால், அதே திராவிட ஆட்சியாளர்களின் பிள்ளைகள் படிக்கும் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இந்தி மொழி நன்றாக படித்து, வட நாடு வரை சென்று வேலையும், எம்.பி, மத்திய அமைச்சர் போன்ற பதவிகளையும் பெற்று மகிழ்ந்து அனுபவிக்கின்றனர்.

இந்த அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரம் பற்றியோ, அங்கு கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக, இந்தி மொழி கற்பிக்கப்படாததால், தேர்தல் நேர பகடை காய்களான அடித்தட்டு மக்களின் குழந்தைகள் இருண்டு போயுள்ள எதிர்காலத்தைப் பற்றிய கவலையோ கடுகளவும் இல்லை.இந்நிலை மாற வேண்டுமானால்,தமிழகத்தில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், அனைத்து மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்களின் பிள்ளைகள், அரசின் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்க விரும்புபவர்கள் அனைவரும், அரசு பள்ளிகளில் மட்டுமே கட்டாயம் படிக்க வேண்டும் என, அரசு சட்டம் இருக்க வேண்டும்.

அரசின் சலுகைகளை பெற்று படித்தவர்கள் அனைவரும், வேலைக்காக வெளிநாடு சென்று விடாமல், இந்தியாவில் எங்காவது, குறைந்தது மூன்று ஆண்டுகள் சேவை செய்ய வேண்டும் என்ற சட்டமும் வேண்டும்.கடைக்கோடி குடிமகன் கட்டிய வரி பணத்தில் படிப்பை முடித்தவர்கள், நம் மக்களுக்கு சேவை செய்யாமல், நம் மக்களின் கஷ்டங்களை உணராமல், வெளிநாட்டுக்கு சென்று சொகுசு ழ்க்கை வாழ அனுமதிக்க கூடாது. அரசு பள்ளிகள் வேண்டாம் என்பவருக்கு, அரசில் எந்த வேலையும் இல்லை, அரசு சார்பான பதவிகளும் இல்லை என்ற நிலை ஏற்பட்டால், அரசு பள்ளிகள் சிறப்படையும், நாடும் உயர்வடையும்.

இப்படி ஓர் சட்டம் கொண்டு வருவது முடியாத காரியமல்ல. 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் போலவே, இதுவும் சாத்தியம் தான். தமிழகத்தின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை இருந்தால், இது நிச்சயமாக முடியக்கூடியதே; சாத்தியமே.இதுவே, தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் உயர்வதற்கான தாரக மந்திரம். இது சத்தியமே! சமூக ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும், நீதி அரசர்களும் மவுனம் கலைந்து சமூக நீதி காப்பரா?


வாழ்க... தமிழக சட்டசபை!ஆர்.நாராயணசாமி, ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: லோக்சபா தேர்தலுக்குப் பின், எல்லா கட்சிகளின் நிலைமையும், எப்படி இருந்தது என்பதை, ஆக., 12ம் தேதி, தமிழக சட்டசபையில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர், தன் மொபைல் போன், 'ரிங் டோன்' மூலம் விளக்கினார்.'சட்டி சுட்டதடா... கை விட்டதடா...' என, காங்கிரஸ் கட்சியையும், 'என் கதை முடியும் நேரம்' என, முன்னாள் மத்திய நிதியமைச்சரையும், 'ஸ்பெக்ட்ரம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி ஏது?' என்று கலைஞரையும், 'நான் ஒரு ராசியில்லா ராஜா' என, வைகோவையும் பாடினார்

.நாட்டில் எத்தனையோ பிரச்னை இருக்கும்போது, இதுமாதிரி ஒவ்வொரு அமைச்சரும் பாடினால், எப்படி இருக்கும்! தக்காளிப் பழம் கிலோ என்ன விலை என, அமைச்சருக்குத் தெரியுமா?மக்கள் பிரச்னை, விலைவாசி உயர்வுக்கு தீர்வு இவற்றைப் பற்றி பேச, இவர்களுக்கு ஏது நேரம்? இதைப் பேசுவதற்காகத் தயாராகும் நேரத்தில், பல அரசியல் பிரச்னைகள் வந்து, மண்டையைக் குடைந்து, 'ரிங் டோன்' தயார் செய்யவே நேரம் சரியாகி விடுகிறது! வாழ்க, தமிழக சட்டசபை!


தொண்டர்கள் அணி மாறி விடுவர்!என்.சிவசுந்தர பாரதி, காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: 'தவறு செய்தவர்களின் பெயர்களை சொல்லுங்கள்' என, எதுவும் தெரியாதது போல், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், கேள்வி எழுப்பியுள்ளார். இத்தனை தவறுகளுக்கும் மூலகாரணம் யார் என்பது, ஸ்டாலினுக்கு மட்டுமல்ல, தி.மு.க.,வில் உள்ள அனைவருக்கும் தெரியும். தி.மு.க.,வுக்கு முன்னால் தமிழகத்தை ஆண்டவர்கள், தி.மு.க., போல் எல்லா வகையிலும் பேராசை பிடித்து, ஊழல் செய்தனரா?சர்க்காரியா கமிஷன் அமைத்ததும், சாஷ்டாங்கமாக கூட்டணி அமைத்ததெல்லாம் ஸ்டாலினுக்கு தெரியாதா? அதற்கு காரணம் யார்?

தி.மு.க.,வினர் மீது போடப்பட்டுள்ள பிரபல வழக்குகள் எல்லாம், தலைமைக்கும், ஸ்டாலினுக்கும் தெரியாதா? தெரிந்தும் வேட்பாளர்களாக நியமித்தது யார்? ஸ்டாலினுக்கு தெரியாதா? அப்பாவி கட்சித் தொண்டர்களிடம் கேள்வி கேட்கிறாரே...!தி.மு.க., மக்கள் பிரதிநிதிகள், எக்ஸ்பிரஸ் வேகத்தில் கோடீஸ்வரர்கள் ஆனது எப்படி? அ.தி.மு.க.,வுக்கு, எல்லா வகையிலும், முன்னோடியாக இருந்தது யார்? தெரியாமல் இருப்பதை விட, தெரிந்தும் தெரியாமல் நாடகமாடி, தொண்டர்களை ஏமாற்றினால், தொண்டர்கள் அணி மாறி விடுவர் பொருளாளரே!


வசுந்தராவை பின்பற்றுவாரா நம் முதல்வர்?கே.என்.அப்துல், சமூக ஆர்வலர், நெடுங்குன்றம், காஞ்சியிலிருந்து எழுதுகிறார்: 'சட்டசபை கூட்டத்துக்கு தாமதமாக வரும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்' என, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் என, கடந்த, ஜூலை 13ம் தேதி இதழில் செய்தி வெளியாகியிருந்தது.ராஜஸ்தானில், சட்டசபை கூட்டத் தொடருக்கு எம்.எல்.ஏ.,க்கள் தாமதமாக வருவது, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தான். 

இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, முதல்வர் சரியான முடிவு எடுத்தார்; அதே போல, தமிழக முதல்வரும் முடிவு எடுக்க முன்வர வேண்டும்.பொதுமக்கள் தேர்வு செய்து, சட்டசபைக்கு அனுப்பி வைத்தால், மக்களின் நம்பிக்கையை வீணடிக்கின்றனர். சுயநலமாக இல்லாமல், பொது நலமாக இருக்க, நம் அரசியல்வாதிகள் கற்றுக் கொள்வரா?

Post a Comment

2 Comments

  1. மறுக்க முடியாத உண்மை. அரசு ஆசிரியர்களின் கைகளில் மட்டுமே தீர்வு உள்ளது. அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தி அதை அனைவருக்கும் உணர்த்த வேண்டும். தனியார் பள்ளி என்ற பெயரில் அடிக்கும் கொள்ளைகளை தடுக்க வேண்டும். மக்களே சிந்திப்பீர்.

    ReplyDelete
  2. அரசு பள்ளிகளில் மாணவர்கள் இல்லையெனில் முதலில் பாதிக்கப்படுவது ஆசிரியர் தாம். உங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேருங்கள். மாதம் ஒரு முறை தம் குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளிக்கு சென்று வகுப்பு ஆசிரியரிடம் குழந்தைகள் முன்னேற்றம் பற்றி கேளுங்கள். நிலைமை மாறும்.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..